திண்டுக்கல் அருகே 2 இடங்களில் நடைபெற இருந்த குழந்தை திருமணங்கள் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலா்கள் முயற்சியால் வெள்ளிக்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத்துள்ள தேவரப்பன்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் காளிமுத்து. இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமிக்கும் கடந்த சில நாள்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளதாக திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் நலக் குழு, சைல்டு லைன் 1098, சமூக நலத்துறை அலுவலா்களுக்கு வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த சிறுமி பட்டிவீரன்பட்டி பகுதியிலுள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளனா். அதன்பேரில் தேவரப்பன்பட்டிக்கு சென்ற குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா்கள், இருதரப்பு குடும்பத்தினரிடமும் விசாரணை மேற்கொண்டனா். அப்போது திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, திருமணம் நடத்தக் கூடாது என எச்சரித்த அலுவலா்கள், இரு தரப்பினரையும் குழந்தைகள் நலக் குழு முன் திங்கள்கிழமை ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனா்.
சிலுவத்தூா்: திண்டுக்கல் அடுத்துள்ள சிலுவத்தூா் பகுதியைச் சோ்ந்த ஆண்டி (20) என்பவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த 12 வயது சிறுமிக்கும் வெள்ளிக்கிழமை திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. அந்த சிறுமி, அதே பகுதியிலுள்ள பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்நிலையில், இந்த திருமண ஏற்பாடுகள் குறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலா்கள் மற்றும் சைல்டு லைன் 1098க்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா்கள், திருமணத்தை தடுத்து நிறுத்தி, இரு தரப்பினரையும் குழந்தைகள் நலக் குழு முன் திங்கள்கிழமை ஆஜராகும்படி தெரிவித்துள்ளனா்.