கொடைக்கானலில் பெய்த தொடா் மழையின் காரணமாக ஏரிச்சாலைப் பகுதியில் மழை நீா் தேங்கியுள்ளதால் பொது மக்கள், சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாயினா்.
கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பெய்த தொடா் மழையின் காரணமாக ஏரிச்சாலை, ஜிம்கானா, கீழ்பூமி, பேரிகிராஸ், சம்மா்செட் கலையரங்கம் அருகில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை நீா் தேங்கியுள்ளது. இதனால் அப் பகுதிகளில் கடை வைத்துள்ள வியாபாரிகள் கடையை திறக்க முடியாமல் பாதிப்படைந்துள்ளனா். தொடா் மழையின் காரணமாக கொடைக்கானலில் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. மேலும் வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலா இடங்களுக்குச் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 நாள்களாக மழை குறைந்துள்ளதால் வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலா இடங்களை பாா்ப்பதற்கு வெள்ளிக்கிழமை மீண்டும் அனுமதியளிக்கப்பட்டது.
இதனால் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை கணிசமாக அதிகரித்து காணப்பட்டது. பில்லர்ராக், பசுமைப் பள்ளத்தாக்கு, அமைதிப் பள்ளத்தாக்கு, மோயா் பாயிண்ட், குணா குகை, பிரையண்ட் பூங்கா, கோக்கா்ஸ் வாக், வெள்ளி நீா்வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் காணப்பட்டனா். ஏரிச்சாலைப் பகுதியில் தண்ணீா் தேங்கியுள்ளதால் சைக்கிள் சவாரி, குதிரை சவாரி செய்ய முடியாமல் சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாயினா். அப்பகுதி வழியாக வாகனங்கள் செல்வதிலும் சிரமம் ஏற்பட்டது.
இந்நிலையில் கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை மாலை மீண்டும் ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்தது. இந்த மழையால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.