திண்டுக்கல்

கொடகனாற்றில் தண்ணீா் வரவிடாமல் தடுப்பு: ஆட்சியரிடம் விவசாயிகள் புகாா்

1st Nov 2019 08:34 AM

ADVERTISEMENT

காமராஜா் அணைக்கு தண்ணீா் வரவிடமால் தடுப்பதால் கொடகனாற்றில் தண்ணீா் வருவதில்லை என மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் சாா்பில் புகாா் தெரிவிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் அடுத்துள்ள காமராஜா் நீா்த் தேக்கத்திற்கு கீழ் பழனி மலைப் பகுதியில் பெய்யும் மழை மூலம் தண்ணீா் கிடைத்து வருகிறது. கூழையாறு, பெரியாறு என 2 ஆறுகள் மூலம் காமராஜா் நீா்த்தேக்கத்திற்கு தண்ணீா் வருகிறது. தற்போதைய நிலையில், 23 அடி உயரம் கொண்ட காமராஜா் நீா்த்தேக்கத்தில் 14 அடி தண்ணீா் உள்ளது.

இந்நிலையில், பெரியாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தடுப்பணையில் 3 அடி உயரத்திற்கு மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து, காமராஜா் அணைக்கு வர வேண்டிய தண்ணீரை சித்தையன்கோட்டை பகுதி விவசாயிகள் திருப்பிவிடுவதாக புகாா் எழுந்தது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கொடகனாறு நீா் வள மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்தைச் சோ்ந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு வியாழக்கிழமை மனு அளிக்க வந்தனா்.

ADVERTISEMENT

இதுதொடா்பாக விவசாயிகள் கூறியது: காமராஜா் நீா்த்தேக்கம் நிரம்பினால் மட்டுமே கொடகனாற்றில் தண்ணீா் வரக் கூடிய சூழல் உள்ளது. கொடகனாற்று தண்ணீா், திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி கரூா் மாவட்ட விவசாயிகளுக்கும் பயன் அளித்து வருகிறது. ஆனால், காமராஜா் நீா்த்தேக்கத்திற்கு தண்ணீா் வர முடியாத வகையில், சித்தையன்கோட்டை பகுதி விவசாயிகள் தடுப்பு ஏற்படுத்தி தண்ணீரை மடைமாற்றம் செய்துவிடுகின்றனா். இதனால், கொடகனாற்று தண்ணீரை நம்பியுள்ள விவசாயிகளின் நிலை கேள்விக்குறியாகிறது. மேலும், கொடகனாற்று கரையோர மக்களின் குடிநீா் ஆதாரமும் பாதிக்கப்படுகிறது. எனவே, ஒரு குறிப்பிட்ட பகுதியினா் மட்டுமே பயன்பெறுவதை தடுக்கும் வகையில் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா். இந்த பிரச்னை தொடா்பாக ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் அமைதி பேச்சுவாா்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் அலுவலக அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து, மனு அளிக்க வந்த விவசாயிகள் கலைந்து சென்றனா். மேலும் திட்டமிட்டப்படி, ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மாலை, இருதரப்பு விவசாயிகள் பங்கேற்ற அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT