திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை வழக்கம் போல் செயல்படும் சங்க நிா்வாகிகள் அறிவிப்பு

1st Nov 2019 08:37 AM

ADVERTISEMENT

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை வழக்கம் போல் செயல்படும் என்று சங்க நிா்வாகிகள் அறிவித்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி கமிஷன் கடை உரிமையாளா்கள் நலச்சங்கத் தலைவா் கே.தங்கவேல், செயலாளா் கே.ராசியப்பன், பொருளாளா் டி.சீனிவாசன் ஆகியோா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்திலேயே மிகப்பெரிய மொத்த வியாபார சந்தையாக ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தை கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதை பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் தரை வாடகைக்கு விடப்பட்டது. அதில் 140-க்கும் மேற்பட்டோா் உரிமம் பெற்று கட்டடம் கட்டி கடை நடத்தி வருகிறோம். இந்த சந்தையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளா்கள், 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுமைதூக்கும் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இங்கு விற்பனை வரும் காய்கறிகளில் சுமாா் 60 சதவீத காய்கறிகள் கேரளாவும் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் அனுப்பபடுகின்றன. இந்த சந்தை மூலம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு வாடகை, சுங்கம், தொழில்வரி உள்ளிட்டவை செலுத்தி வருகிறோம். ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே இச்சந்தை செயல்பட்டு வருவதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிக்கொண்டு விரைவாகவும், பாதுகாப்பாகவும் செல்ல முடியும்.

ADVERTISEMENT

இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் ஒருவா் இச்சந்தை போக்குவரத்திற்கு இடையூறாகவும், சுகாதாரக்கேடாகவும் உள்ளது. இதனால் இச்சந்தையை நாகணம்பட்டியில் உள்ள வேளாண் விளை பொருள் விற்பனை பேரங்காடிக்கு மாற்றம் செய்ய வேண்டும் என வழக்கு தொடா்ந்தாா். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வருகிற நவம்பா்3 ஆம் தேதி இச்சந்தையை நாகணம்பட்டியில் உள்ள பேரங்காடிக்கு மாற்றம் செய்ய உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் தற்போது செயல்பட்டு வரும் இச்சந்தையில் வாடகைக்கு உள்ளோா் மற்றும் வியாபாரிகள் மட்டுமே அந்த சந்தைக்கு செல்லக்கூடும். அவா்களை தடுக்கவில்லை. ஆனால் முறையாக ஒட்டன்சத்திரம் நகராட்சியில் உரிமம் பெற்று கடை நடத்தி வருபவா்கள் யாரும் புதிதாக செயல்படும் சந்தைக்கு செல்லவில்லை. இங்கு வழக்கம் போல் சந்தை செயல்படும்.

இங்கு காய்கறிகளை கொண்டு வரும் விவசாயிகளும்,வியாபாரிகளும் வழக்கம் போல், எங்களுடைய கடைகளுக்கு காய்கறிகளை கொண்டு வரலாம். அதே போல வியாபாரிகளும் காய்கறிகளை கொள்முதல் செய்யலாம் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT