பழனி அருகே பெரியதுரையான் கோயில் சித்திரைத் திருவிழா: 120 கிடாக்கள் வெட்டி பக்தர்களுக்கு விருந்து

பழனி அருகே கோம்பைப்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு பெரியதுரையான் கோயில் சித்திரைத் திருவிழாவை

பழனி அருகே கோம்பைப்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு பெரியதுரையான் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, கருப்பண்ணசாமிக்கு 120 கிடாக்கள் வெட்டி பக்தர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது. 
      திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த கோம்பைப்பட்டியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியில் மேற்குமலைத் தொடர்ச்சி அடிவாரத்தில் சுயம்புவாக அமைந்துள்ள  பெரியதுரையான் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா கொண்டாடப்படுகிறது.
      இதை முன்னிட்டு, ஏப்ரல் 29 ஆம் தேதி இரவு தீர்த்தம் கொண்டு வருதல், கருப்பண்ணசாமி உருவாரம் கொண்டு வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை விநாயகர், பெரியதுரையான், கருப்பண்ணசாமி, பொலக்கருப்பன், தன்னாசியப்பன் உள்ளிட்ட மூலவர், பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.       காலை முதலே கருப்பண்ணசாமி சன்னிதி முன்பாக கிடா வெட்டு தொடங்கியது. சுவாமிக்கு வேண்டிக் கொண்டவர்கள் அடுத்தடுத்து கிடாக்களை ஒப்படைத்தவண்ணம் இருந்தனர். இதில், சுமார் 120 கிடாக்கள் வெட்டப்பட்டன. தொடர்ந்து, கிடாக்கள் உரிக்கப்பட்டு சமையல் நடைபெற்றது.      இதில், ஏராளமான பணியாளர்கள் பங்கேற்று சாதம் சமைத்து, மலை போல் குவித்து வைத்திருந்தனர். காலை முதல் மாலை வரை நடைபெற்ற அசைவ விருந்தில், சுமார் பத்தாயிரம் பக்தர்கள் பங்கேற்று உணவருந்தினர். 
      விழாவை முன்னிட்டு ஏராளமான தனியார் வாகனங்கள், அரசுப் பேருந்துகள் கணக்கன்பட்டியிலிருந்து பெரியதுரையான் கோயில் வரை இயக்கப்பட்டன. இதில், ஏராளமான போலீஸார்,  ஊர்க் காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை, விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com