திண்டுக்கல் மாவட்டம், பாளையன்கோட்டை ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து குடிநீர் கோரி செம்பட்டி- தேனி சாலையில், கூலம்பட்டி பிரிவில் காலிலிக் குடங்களுடன் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலிலில் ஈடுபட்டனர்.
ஆத்தூர் ஒன்றியம், பாளையன்கோட்டை ஊராட்சி, காமன்பட்டியில் வெள்ளிக்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி செயலர் (பொறுப்பு) பால்ராஜ் பேச ஆரம்பித்த போது, பொதுமக்கள் குடிநீர் கோரி கோஷமிட்டனர். பின்னர் அவர்கள் காலிக்லி குடங்களுடன் செம்பட்டி- தேனி சாலையில் உள்ள கூலம்பட்டி பிரிவுக்கு வந்தனர்.
அங்கு சாலையில் அமர்ந்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகளை கண்டித்தும் குடிநீர் கோரியும் கோஷமிட்டனர்.
ஏற்கெனவே பிள்ளையார்நத்தத்தில் சாலை மறியலிலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்திவிட்டு வந்த ஊராட்சிகளின் உதவி இயக்குநரிடம் ஊராட்சி செயலர் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரி மீது அவர்கள் புகார் செய்தனர்.
அப்போது பொதுமக்கள், காமன்பட்டியில் கடந்த மாதம் திருவிழா நடந்தபோது, ஊராட்சி ஆழ்துளை கிணறை பராமரிக்க ஊராட்சியில் பணம் இல்லை எனக்கூறிய, ஊராட்சி செயலர் (பொறுப்பு) ஊராட்சி மக்களிடம் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை வாங்கிக் கொண்டுதான், மோட்டாரை சரி செய்தார் என்றார்கள்.
மேலும் அவர்கள் எங்கள் ஊராட்சிக்கு பொறுப்பு ஊராட்சி செயலரை நியமிக்காமல் தனியாக ஊராட்சி செயலரை நியமிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
அப்போது ஊராட்சிகளின் உதவி இயக்குநர் கருப்பையா, அதிகாரிகளை கண்டித்தார். அதற்கு பதில் அளிக்க முடியாமல் ஊராட்சி செயலரும், வட்டார வளர்ச்சி அலுவலரும் மௌனமாக இருந்தனர். பின்னர், குடிநீர் பிரச்னை, தனி செயலர் உள்ளிட்ட பொதுமக்களின் கோரிக்கை ஒரு வாரத்திற்குள் நிறைவேற்றப்படும் என உறுதி கூறியவுடன், அனைவரும் மறியலை கைவிட்டனர்.