திண்டுக்கல்

பழனியில் சாலையோர குடிசைவாசிகள் மறியல்

31st Jul 2019 07:38 AM

ADVERTISEMENT

பழனி-கொடைக்கானல் சாலையோர குடிசைகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குடிசைவாசிகள் செவ்வாய்க்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியிலிருந்து கொடைக்கானல் செல்லும் சாலையோரம் பால்பண்ணை அருகே கடந்த 50 ஆண்டுகளாக 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, மின்வாரியம் சார்பில் மின்இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில், சாலையோரத்திலுள்ள வயல் உரிமையாளர் ஒருவர் தனது நிலத்துக்கு அருகே குடிசைகள் உள்ளதாகவும், இதனால் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுவதாகவும் கூறி, நீதிமன்றத்தில் சாலையோர ஆக்கிரமிப்பு குடிசைகளை அகற்ற வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்துள்ளார். இதனையடுத்து, அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளில் 18 குடிசை வீடுகளை மட்டும் அகற்ற, நெடுஞ்சாலைத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதையடுத்து, புதன்கிழமை குடிசைகளை அகற்றுவதாகத் தெரிவித்த அதிகாரிகள், செவ்வாய்க்கிழமை குடிசைகளுக்கு வழங்கியுள்ள மின்இணைப்புகளை துண்டிக்க மின்வாரிய அதிகாரிகளுடன் வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த குடிசைவாசிகள், மின்வாரிய அதிகாரிகளுடனும், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். 
அப்போது, சாலையோரம் வசித்து வரும் தங்களுக்கு அரசு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டுமென்று பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்தனர்.
அதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த அடிவாரம் போலீஸார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், இப்பிரச்னையை மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும், தற்காலிகமாக ஆக்கிரமிப்பு அகற்றத்தை நிறுத்தி வைப்பதாகவும் தெரிவித்தனர். அதையடுத்து, குடிசைவாசிகள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், பழனி-கொடைக்கானல் சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT