திண்டுக்கல்

வடமதுரை அருகே சொத்துத் தகராறில் இளைஞர் கொலை: 2 பேர் கைது

29th Jul 2019 08:57 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே சொத்துத் தகராறில் இளைஞர் கொலை செய்யப்பட்ட  சம்பவத்தில் 2 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
வடமதுரை அடுத்துள்ள கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள்(48). இவரது மகன் மணிகண்டன்(26). அதேபகுதியில் பெருமாளின் தம்பி திருப்பதி(44), குடும்பத்தினருடன் தனியாக வசித்து வந்தார். பெருமாள் மற்றும் திருப்பதி குடும்பத்தினருக்கு இடையே ஏற்கெனவே சொத்துப் பிரச்னை இருந்து வருவதாக கூறப்படுகிறது. 
இந்நிலையில், பெருமாளின் மகள் சரண்யா கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்ததற்கு, திருப்பதியின் குடும்பத்தினரே காரணம் என பெருமாளின் குடும்பத்தினர் கருதி வந்துள்ளனர். இதனால், திருப்பதியின் குடும்பத்தினர் மீது பெருமாள் குடும்பத்தினரின் பகை மேலும் அதிகரித்தது.  இந்நிலையில், பெருமாள் மற்றும் திருப்பதி ஆகியோருக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது சம்பவ இடத்திற்கு சென்ற மணிகண்டன், திருப்பதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த திருப்பதி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிகண்டனை குத்தியுள்ளார். 
மேலும் தனது அண்ணன் பெருமாளையும் அவர் கத்தியால் குத்தினாராம். இதில் பலத்த காயமடைந்த இருவரையும், அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே மணிகண்டன் உயிரிழந்தார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற பெருமாள், தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார். 
இது குறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையில் வடமதுரை போலீஸார் சம்பவம் நடைபெற்ற கொல்லப்பட்டிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.கொலை தொடர்பாக, திருப்பதி, அவரது மனைவி புகழேந்தி, மகன்கள் சவடமுத்து, முனீஸ்வரன் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்ட போலீஸார், அதில் திருப்பதி மற்றும் முனீஸ்வரன் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT