திண்டுக்கல்

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை: திண்டுக்கல், பழனி, நத்தத்தில் சிறப்பு முகாம்

29th Jul 2019 08:58 AM

ADVERTISEMENT

மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம், திண்டுக்கல், பழனி, நத்தம் உள்பட 5 வட்டாரங்களில் நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: 
 மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளிப்புத் துறையினால் மாற்றுத் திறனாளிகளுக்கு நாடு முழுவதும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
மாற்றுத் திறனாளிகளின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தவர்களுக்கு, தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை அந்தந்த நபர்களின் வீடுகளுக்கே அனுப்பப்பட்டு வருகிறது. 
  இதுவரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்களை பெறுவதற்காக திண்டுக்கல் மாவட்டத்தில், வட்டார வாரியாக சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. 
அதன்படி ஆகஸ்ட் 1 இல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் திண்டுக்கல் வட்டாரத்தைச் சேர்ந்தவர்களுக்கும், ஆகஸ்ட் 2 இல் சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சாணர்ப்பட்டி வட்டாரத்தைச் சேர்ந்தவர்களுக்கும்,ஆகஸ்ட் 3 இல் நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நத்தம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்களுக்கும்,  ஆகஸ்ட் 6 இல்  ரெட்டியார்சத்திரம்  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரெட்டியார்சத்திரம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்களுக்கும், ஆகஸ்ட் 8 இல் பழனி ஊராட்சி ஒன்றிய  அலுவலகத்தில் பழனி  வட்டாரத்தைச் சேர்ந்தவர்களுக்கும் சிறப்பு முகாம் நடைபெறும். இந்த முகாம் காலை 9.30 முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும்.
மாற்றுத்திறனாளிகள் கொண்டுவரவேண்டியஆவணங்கள்: 
 மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை மருத்துவ சான்றுடன் கூடியது அசல் மற்றும் நகல். ரேசன் கார்டு அட்டை அசல்  மற்றும் நகல். ஆதார் அட்டை அசல் மற்றும் நகல். 
மார்பளவு புகைப்படம் 2 மற்றும் மாற்றுத் திறனாளியின் கையொப்பம் அல்லது கைரேகை ஆகியவற்றுடன் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மட்டும் வரவேண்டும். 
இதுதொடர்பான கூடுதல் விவரங்கள் பெற திண்டுக்கல் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை 0451-246099 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT