திண்டுக்கல்

இடநெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நத்தம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி!

29th Jul 2019 08:59 AM

ADVERTISEMENT

கிராமப்புறங்களைச் சேர்ந்த 2,250க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு புகலிடமாக விளங்கும் நத்தம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி இட நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால், கூடுதல் வகுப்பறை மற்றும் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என மாணவிகள் மற்றும் பெற்றோர் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் நத்தம் மட்டுமின்றி, லிங்கவாடி, வத்திப்பட்டி, மூங்கில்பட்டி, பட்டணம்பட்டி, பரளி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த மாணவிகளும் பயின்று வருகின்றனர். கடந்த 1965ஆம் ஆண்டு முதல் உயர்நிலைப் பள்ளியாக செயல்படத் தொடங்கி, 1995 முதல் மேல்நிலைப் பள்ளியாக நிலை உயர்த்தப்பட்டுள்ள இப்பள்ளியில் தற்போது 2,250க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். 
அரசுப் பள்ளிகளைப் பொருத்தவரை மாணவர்கள் சேர்க்கை இல்லாமல் தடுமாறி வரும் நிலையில், கடந்த பல ஆண்டுகளாகவே திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகளுடன் செயல்பட்டு வரும் 4 பள்ளிகளின் பட்டியலில், நத்தம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் இடம் பெற்று வருகிறது. ஆனால், வகுப்பறைகளுக்கு போதிய இட வசதியில்லாமல் கடந்த பல ஆண்டுகளாகவே நெருக்கடியை சந்தித்து வருகிறது. 6 முதல் 8ஆம் வகுப்பு வரை ஒரு வளாகத்திலும், 9 முதல் 12ஆம் வகுப்பு வரை மற்றொரு வளாகத்திலுமாக மொத்தம் 2.35 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே இப்பள்ளி அமைந்துள்ளது. 
 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலும் ஆங்கில வழியிலும் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் 6 முதல் 10ஆம் வகுப்பு வரையிலும், தமிழ் வழியில் மட்டுமே 2 பிரிவுகளாக வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன. இட நெருக்கடியான சூழலில், பல வகுப்புகள் மரத்தடியிலும், நாடக மேடையிலுமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதேபோல் கழிப்பறை வசதியும் கூடுதலாக இருக்க வேண்டும் என மாணவிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
இதுதொடர்பாக நத்தத்தைச் சேர்ந்த நதியா கூறியது: இப் பள்ளியில், நத்தத்திலிருந்து 7 முதல் 12 கி.மீ. தொலைவிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவிகளும் கல்வி கற்க வருகின்றனர். நத்தத்திற்கு தென்பகுதியில் சுமார் 15 கி.மீ. தொலைவுக்கு அரசு மேல்நிலைப் பள்ளிகள் கிடையாது. மேலும், மகளிர் பள்ளி என்ற காரணத்தினாலும், பல பெற்றோர் இப் பள்ளியை தேர்வு செய்கின்றனர்.  
  ஒவ்வொரு ஆண்டும் மாணவிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தபோதிலும், பள்ளிக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. கிராமப்புற மாணவிகளின் புகலிடமாக உள்ள இப்பள்ளிக்கு வகுப்பறை, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக் கொடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும் என்றார்.
இதுதொடர்பாக கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், இப் பள்ளி மாணவிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டவும், கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இப்பள்ளியிலுள்ள பழமையான ஒரு கட்டடத்தை இடிப்பதற்கு பொதுப்பணித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன் பின்னர், அதே இடத்தில் புதிய கட்டடம் விரைவாக கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT