சாணார்பட்டி அருகே நிறுத்தப்பட்டுள்ள சாலைப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி, துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அடுத்துள்ள எமக்கலாபுரம் ஊராட்சிக்குள்பட்ட கருப்புடையான்பட்டி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன . இந்நிலையில் எமக்கலாபுரம் பிரிவிலிருந்து கருப்புடையான்பட்டி கிராமம் வழியாக சிறுமலை அடிவாரம் வரை புதிய தார்ச் சாலை அமைப்பதற்கு ரூ.18 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
நெடுஞ்சாலைத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் இப்பணியில், தார்ச் சாலை மட்டுமின்றி, 7 பாலங்களும் கட்டப்படுகின்றன. இதனிடையே, பாலங்கள் முறையாக கட்டப்படவில்லை என்றும், ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றவில்லை எனக் கூறியும் கருப்புடையான்பட்டி கிராம மக்கள், திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியரிடம் கடந்த 8 ஆம் தேதி மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து சாலை மற்றும் பாலம் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் பாலம் கட்டுமானப் பணிகள் முடிவடையாததால் எமக்கலாப்புரம் கிராமத்திற்குள் பேருந்துகள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிப்படையும் நிலை ஏற்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள், எமக்கலாபுரம் பிரிவில் திண்டுக்கல் நத்தம் சாலையில் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக நத்தம் நோக்கிச் சென்ற மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி, காரை நிறுத்தி போராட்டம் குறித்து பொதுமக்களிடம் விசாரித்தார்.
பின்னர், திண்டுக்கல் கோட்டாட்சியர் மூலம் பிரச்னைக்கு தீர்வு காணவும், துரிதமாக சாலைப் பணிகளை முடிக்கவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதனை ஏற்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.