புறம்போக்கு நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளதாக புகார் தெரிவித்து மனு அளிக்க திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் வந்த முதியவர் திடீரென தீக்குளிக்க முயன்றார்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு நாகலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குழந்தை (60). அதே பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோருடன் குறைதீர் கூட்டத்தில் மனு அளிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை வந்தார். ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் பகுதி அருகே திடீரென மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்ற குழந்தையை, போலீஸார் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
அதில், தங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வந்த புறம்போக்கு நிலத்தை, அதே பகுதியில் வசிக்கும் பிற சமுதாய மக்கள் ஆக்கிரமித்துக் கொண்டதாகவும், இதுதொடர்பாக அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
இதனை அடுத்து, போலீஸார் அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.