அரசுப் பேருந்துகளுக்கு தரமான உதிரிப் பாகங்களை வழங்க வேண்டும் என சிஐடியு தொழிற்சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின்(சிஐடியு) 28ஆவது ஆண்டு பேரவைக் கூட்டம் திண்டுக்கல்லிலுள்ள சிஐடியு அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு கோட்டத்தலைவர் ஐ.ஜெயக்குமார் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலர் கே.ஆர்.கணேசன் தொடக்கவுரை நிகழ்த்தினார். இதில் சிறப்பு அழைப்பாளராக சம்மேளன பொதுச்செயலர் கே.ஆறுமுகநயினார் கலந்து கொண்டு நிறைவுரையாற்றினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கடந்த 5 ஆண்டுகளாக அரசுப் பேருந்துகளுக்கு தேவையான தரமான உதிரிப் பாகங்கள் வழங்கப்படுவதில்லை. இதனால், பொதுமக்களுக்கு பாதுகாப்பான பயணத்திற்கு உத்தரவாதமில்லாத நிலை உள்ளது. எனவே, தரமான உதிரிப் பாகங்களை வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தொழிலாளர்கள் ஓய்வு பெறும் நாளில் பணிக்கொடை உள்ளிட்ட அனைத்து பணப் பலன்களையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன.