ஒட்டன்சத்திரம் நகராட்சிப் பகுதியில் சுற்றித் திரிந்த பன்றிகளை, நகராட்சி நிர்வாகத்தினர் காவல் துறை உதவியுடன் திங்கள்கிழமை பிடித்து அப்புறப்படுத்தினர்.
ஒட்டன்சத்திரம் நகராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் பன்றிகள் சுதந்திரமாக திரிந்து வருகின்றன. இதனால், பல வகையான தொற்று நோய்கள் ஏற்படும் சூழ்நிலை உள்ளதாக, பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இவற்றைப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனர்.
அதன்பேரில், நகராட்சிப் பகுதியில் சுற்றித் திரிந்த பன்றிகளை பிடிக்க வெளியூர்களில் இருந்து ஆள்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்களுடன், நகராட்சிப் பணியாளர்களும் சேர்ந்து பன்றிகளை பிடித்தனர். பன்றிகளை பிடிக்கவிடாமல், பன்றி வளர்ப்போர் தகராறு செய்வதால், காவல் துறையினர் உதவியுடன் சுமார் 36 பன்றிகள் பிடிக்கப்பட்டன.
இந்த பன்றிகளை லாரியில் ஏற்றி நாகர்கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பன்றி வளர்ப்போர் லாரியை வழிமறித்து பன்றிகளை கீழிறக்கி மீண்டும் இப்பகுதிக்கு கொண்டு வராமல் தடுப்பதற்காக, நகராட்சி அதிகாரிகள் மதுரையை அடுத்துள்ள திருமங்கலம் வரை லாரியின் பின்னால் சென்றுவிட்டு வந்ததாகத் தெரிவித்தனர்.