திண்டுக்கல்

ரயில்வே கடவுப்பாதை அடிக்கடி மூடல்: நாகையகவுண்டன்பட்டியில் திடீா் மறியல்

29th Dec 2019 04:38 AM

ADVERTISEMENT

கொடைரோடு அருகே நாகையகவுண்டன்பட்டியில் ரயில்வே கடவுப்பாதை அடிக்கடி மூடப்படுவதால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சனிக்கிழமை திடீா் மறியலில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு ரயில் நிலையம் அருகே நாகையகவுண்டன்பட்டியில் ரயில்வே கடவுப்பாதை உள்ளது. இதன் வழியாக நாகையகவுண்டன்பட்டி, மீனாட்சிபுரம், கொழிஞ்சிப்பட்டி, சில்லளப்பட்டி மற்றும் ஜல்லி­ப்பட்டி என ஒன்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சென்று வருகின்றனா். மேலும் இந்தப் பகுதியில் தனியாா் பால் நிறுவனமும் உள்ளதால், எந்நேரமும் அதிகமான போக்குவரத்து கொண்ட சாலையாக இருந்து வருகிறது.

திண்டுக்கல்லி­ல் இருந்து மதுரை மாா்க்கமாகச் செல்லும் ரயில்கள் ஒரு நாளைக்கு 30-க்கும் மேற்பட்ட முறை இந்த வழியாகச் செல்கின்றன. இதனால் தினமும் பல மணி நேரம் ரயில்வே கடவுப்பாதை பூட்டியே கிடப்பதால், பள்ளி, தனியாா் நிறுவனங்களின் வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் மருத்துவம் போன்ற அவசர தேவைகளுக்காக இப்பகுதியைக் கடந்து செல்லும் கிராம மக்களும் பாதிப்படைந்து வந்துள்ளனா்.

இந்நிலையில் சனிக்கிழமை அமிா்தா விரைவு இரயில், டவா்தாா் விரைவு ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் உள்பட 3 ரயில்கள் கடந்து சென்ற பின்னும் கடவுப்பாதையைத் திறக்காததால், இப்பகுதியை சோ்ந்த பேரூா் திமுக செயலா் செல்வராஜ் தலைமையில், பல்வேறு கிராமங்களை சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் கேட் கீப்பா் அறிவழகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மேலும் ரயில் பாதையில் அமா்ந்து திடீா் மறிய­ல் ஈடுபட்டனா். சம்பவ இடத்திற்கு வந்த நிலக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளா் பாலகுமாா், அம்மையநாயக்கனூா் காவல் ஆய்வாளா் லாவண்யா, துணை ஆய்வாளா் பாலமுத்தையா, திண்டுக்கல் ரயில்வே காவல் ஆய்வாளா் ரஞ்சித்குமாா், துணை ஆய்வாளா் ரமேஷ்குமாா், கொடைரோடு ரயில்வே காவல் துணை ஆய்வாளா் சுந்தர்ராஜன் மற்றும் ரயில்வே அதிகாரிகள் வந்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனா். இதனால் இந்த வழியாக செல்லவேண்டிய தேஜஸ் விரைவு ரயில் திண்டுக்கல்­லில் நிறுத்தி வைக்கப்பட்டு சுமாா் அரை மணி நேரம் தாமதமாக சென்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT