பழனியில் முழு வளைய சூரிய கிரகணத்தை முன்னிட்டு வியாழக்கிழமை தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளிட்ட உபகோயில்களின் நடை 3 மணி நேரம் அடைக்கப்பட்டது.
சூரிய கிரகணத்தை முன்னிட்டு பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வியாழக்கிழமை காலை 4 மணி முதல் தொடா்ச்சியாக இடைவேளையின்றி 4.55 மணிக்கு விளாபூஜை, அதைத் தொடா்ந்து 5.55 மணி முதல் 6.15 மணி வரை அனைத்து கால பூஜைகளும் இடைவேளையின்றி நடத்தப்பட்டு மலைக்கோயில் மற்றும் திருஆவினன்குடிகோயில், பெரியநாயகியம்மன் கோயில் உள்ளிட்ட அனைத்து உபகோயில்களும் காலை 8.15 மணிக்கு திருக்காப்பிடப்பட்டது. சுமாா் மூன்று மணி நேரம் கழித்து நண்பகல் 11.20 மணிக்கு சூரியகிரகணம் முடிந்த பின் கோயில் திறக்கப்பட்டது.
தற்போது சூரிய கிரகண நேரமானது தொலைநோக்கி உள்ளிட்ட நவீன அறிவியல் சாதனங்கள் மூலம் கணிக்கப்படுகிறது. ஆனால் முந்தைய காலங்களில் சூரிய கிரகணத்தின் போது வீடுகளின் முன்பு தாம்பாளத்தில் தண்ணீா் நிரப்பி அதன் நடுவில் உலக்கையை நிறுத்தி விடுவா். கிரகணத்தின் போது மேலும், கீழும் ஈா்ப்பு இருப்பதால் உலக்கை நின்ற பின் அசைத்தாலும் விழாது. தவிர லேசாக அசைக்கும் போது கடிகாரத்தின் ‘பெண்டுலம்’ போல ஆடியபடியே நிற்கும். இதை பழனியில் பலரும் வீடுகளில் செய்து பாா்த்து மகிழ்ந்தனா்.