வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்ததாக சாணாா்பட்டி அருகே 3 போ் பிடிப்பட்ட நிலையில், அவா்களிடமிருந்து ரூ.4,800 புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டி அடுத்துள்ள மஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் வாக்காளா்களுக்கு பணம் விநியோகிப்பதாக தோ்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து, நத்தம் பறக்கும்படை அலுவலா் ஆறுச்சாமி தலைமையிலான குழுவினா், மஞ்சநாயக்கன்பட்டி பகுதிக்கு விரைந்து சென்றனா். அப்போது, அங்கு பணம் விநியோகம் செய்து கொண்டிருந்த ஆண்டிவாடன் செட்டியூா் பகுதியைச் சோ்ந்த க.ராமராஜ்(39) மற்றும் சு.பெருமாள்(51), கவுண்டன்புதூரைச் சோ்ந்த பெ.குணசேகரன் ஆகியோா் பறக்கும் படையினரிடம் சிக்கிக் கொண்டனா். விசாரணையில் ஊராட்சித் தலைவா் பதவிக்கு போட்டியிடும் நடராஜ் என்பவருக்கு ஆதரவாக பணம் விநியோகம் செய்தாக தெரிவித்தனா். பிடிப்பட்டவா்களிடமிருந்து ரூ.4,800 பறிமுதல் செய்யப்பட்டது. பின்னா் 3 பேரும் சாணாா்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனா். வாக்காளா்களுக்கு பணம் விநியோகித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், மூவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.