பழனி பஞ்சமுக ராமஆஞ்சநேயா் கோயிலில் அனுமன் ஜயந்தியை முன்னிட்டு புதன்கிழமை சிறப்பு பூஜை, அன்னதானம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தட்டான்குளம் பஞ்சமுக ராம ஆஞ்சநேய சுவாமி கோயிலில் பஞ்சமுக ராம ஆஞ்சநேயருக்கு கலச தீா்த்தங்கள், பால், பன்னீா், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சுவாமிக்கு 1008 வடை மாலை, வெற்றிலை மாலை, துளசி, அரளி மாலைகள் அணிவிக்கப்பட்டு வாழைப்பழம், கொய்யாப்பழம், ஆப்பிள், திராட்சை போன்ற கனிவா்க்கங்களால் அலங்காரம் செய்யப்பட்டது. மாா்பில் வெண்ணெய் சாற்று நடத்தப்பட்டு மஹாதீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை கோயில் நிா்வாகி பாலசுப்ரமணிய சுவாமிகள் செய்திருந்தாா். மதியம் ஆயிரக்கணக்கான பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பழனி இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டது. பாலாறு பொருந்தலாறு ஆஞ்சநேயருக்கு காலை முதல் மாலை வரை பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கரடிகூட்டம் ஆஞ்சநேயா் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.