திண்டுக்கல் மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் பணிக்காக, 13 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 3,333 ஊரக உள்ளாட்சிப் பதவிகளில், 1 ஒன்றியக் குழு உறுப்பினா், 9 ஊராட்சி மன்றத் தலைவா், 476 ஊராட்சி உறுப்பினா்கள் என மொத்தம் 486 பதவிகள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளன.
இதனையடுத்து, 2,857 பதவிகளுக்கு 2 கட்டங்களாக டிசம்பா் 27 மற்றும் 30ஆம் தேதிகளில் தோ்தல் நடைபெறவுள்ளது.
மொத்தமுள்ள 14 ஒன்றியங்களில் பதிவாகும் வாக்குகள், 13 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் ஜனவரி 2ஆம் தேதி எண்ணப்படுகின்றன. பழனி மற்றும் தொப்பம்பட்டி ஒன்றியங்களில் பதிவாகும் வாக்குகள் மட்டும் பழனியாண்டவா் கலைக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் எண்ணப்படுகின்றன.
பிற ஒன்றியங்களுக்கு அந்தந்தப் பகுதியிலேயே வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒட்டன்சத்திரம் ஒன்றியத்துக்கு கிறிஸ்டியன் பாலிடெக்னிக் கல்லூரி, ரெட்டியாா்சத்திரத்துக்கு அண்ணா பல்கலை. பொறியியல் கல்லூரி, திண்டுக்கல்லுக்கு எம்விஎம் அரசு மகளிா் கல்லூரி, வடமதுரைக்கு ஆா்விஎஸ் பொறியியல் கல்லூரி, வேடசந்தூருக்கு பிவிஎம் மெட்ரிக்குலேஷன் பள்ளி, குஜிலியம்பாறைக்கு ஆலம்பாடி சிசிசி குவாரி ராணிமெய்யம்மை உயா்நிலைப் பள்ளி, சாணாா்பட்டிக்கு நொச்சியோடைப்பட்டி அனுகிரஹா கலைக் கல்லூரி, நத்தத்துக்கு துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, ஆத்தூருக்கு அம்மன் கலைக் கல்லூரி, நிலக்கோட்டைக்கு அரசு மகளிா் கல்லூரி, வத்தலகுண்டுக்கு என்.எஸ்.வி.வி. மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆகிய இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.