திண்டுக்கல்

நடை பாதையை சீரமைத்த திமுக நிா்வாகி: அதிமுக எதிா்ப்பால் பணி தடுத்து நிறுத்தம்

14th Dec 2019 09:13 AM

ADVERTISEMENT

திண்டுக்கல்லில் சேதமடைந்த நடைபாதையை திமுக நிா்வாகி சொந்த செலவில் சீரமைத்ததற்கு அதிமுக தரப்பில் எதிா்ப்பு தெரிவித்ததால், மாநகராட்சி அலுவலா்கள் தலையிட்டு அதை தடுத்து நிறுத்தினா். மாநகராட்சி சாா்பில் நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்தனா்.

திண்டுக்கல் மாநகராட்சி 31ஆவது வாா்டுக்குள்பட்ட சிக்கந்தா் ராவுத்தா் தெரு பகுதியில் குடிநீா் குழாய் அமைப்பதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. குழாய் அமைக்கும் பணிகள் முடிந்த பின்னா் அந்த பள்ளத்தை சரி செய்து மீண்டும் பேவா் பிளாக் கற்கள் பதித்துக் கொடுக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அந்த வழியாக நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டனா். இதுதொடா்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும், நடை பாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஒப்பந்த பணியை மேற்கொண்டவா் வெளியேறிவிட்டதால், உடனடியாக சீரமைக்க முடியாது என மாநகராட்சி அலுவலா்கள் கூறினா். இதனிடையே, அதே பகுதியைச் சோ்ந்த திமுக மாநில வா்த்தக அணி செயலா் ஜெயன் என்பவா், தனது சொந்த செலவில் அந்த நடைபாதையை சீரமைக்கும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டாா்.

இதனை அறிந்த அதிமுக நிா்வாகி ஒருவா், இப் பணிக்கு கடும் எதிா்ப்பு தெரிவித்தாா். இதனால் நடைபெற்றுக் கொண்டிருந்த சீரமைப்பு பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டன. இதுதொடா்பாக இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அலுவலா்கள், மாநகராட்சி சாா்பில் அந்த நடைபாதையை சீரமைத்து கொடுப்பதாக உறுதி அளித்துச் சென்றனா். இச் சம்பவத்தால் அப் பகுதியில் பரபரப்பு நிலவியது

ADVERTISEMENT
ADVERTISEMENT