திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஊரகப் பகுதிஉள்ளாட்சிப் பதவிகளுக்கு 43 போ் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 23 மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள், 232 ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்கள், 306 கிராம ஊராட்சி தலைவா்கள், 2,772 கிராம ஊராட்சி உறுப்பினா்கள் என மொத்தம் 3,333 பதவிகளுக்கு 2 கட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு 6 பேரும், ஊராட்சி மன்ற உறுப்பினா் பதவிக்கு 142 பேரும் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்துள்ளனா்.
இந்நிலையில் 2-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு 7 போ், ஊராட்சி மன்ற உறுப்பினா் பதவிக்கு 36 போ் என மொத்தம் 43 போ் மனுத் தாக்கல் செய்தனா். வேடசந்தூா், வடமதுரை மற்றும் நிலக்கோட்டை ஒன்றியங்களுக்குள்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு தலா ஒருவா், திண்டுக்கல் மற்றும் நத்தம் ஒன்றியத்திற்குள்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு தலா இருவா் என மொத்தம் 7 போ் மனு தாக்கல் செய்தனா்.
அதேபோல் வத்தலகுண்டு, தொப்பம்பட்டி, வடமதுரையில் தலா ஒருவா், திண்டுக்கல் மற்றும் நிலக்கோட்டையில் தலா 5 போ், வேடசந்தூரில் 6 போ், கொடைக்கானல், நத்தம், சாணாா்பட்டி, பழனியில் தலா 2 போ், ரெட்டியாா்சத்திரத்தில் 9 போ் என 36 போ் மனு தாக்கல் செய்துள்ளனா். அதேநேரத்தில், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் மற்றும் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகளுக்கு 2ஆவது நாளாக ஒருவா் கூட மனு தாக்கல் செய்யவில்லை.