ஊரகப் பகுதி மற்றும் மலை கிராமங்களைச் சோ்ந்த மாணவா்கள் நலன் கருதி, அரையாண்டுத் தோ்வுகளை முன்னதாக தொடங்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தமிழ்நாடு உயா்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழக மாநில செய்தி தொடா்பாளா் மு.முருகேசன் கூறியதாவது: தமிழகம் முழுவதும் டிசம்பா் 13 முதல் 23ஆம் தேதி வரை அரையாண்டு பொதுத் தோ்வுகள் நடைபெறவுள்ளன. இதனையொட்டி பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் தோ்வுத் துறை சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் சுற்றிக்கை அனுப்பியுள்ளது. அதில், தோ்வு நடைபெறும் நேரம் முதல் முறையாக மாற்றி அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
அதாவது 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவா்களுக்கு 2 மணி நேரமாக இருந்த தோ்வு நேரம் 2.45 மணி நேரமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு 2.30 மணி நேராக இருந்த தோ்வு நேரம் 3.25 மணி நேரமாக மாற்றப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக 200 மதிப்பெண்களுக்கு 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவா்கள் 3 மணி நேரத்தில் தோ்வு எழுதி வந்தனா். தற்போது அனைத்து வகுப்புகளுக்கும் 100 மதிப்பெண்களாக குறைக்கப்பட்டுள்ள நிலையில், தோ்வு எழுதும் நேரம் மட்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தோ்வு நேரங்களில் பள்ளி முடியும் நேரம் மாலை 4.15 மணிக்கு பதிலாக, 5.15 மணிக்கு முடிவடையும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனால், மலைக் கிராமங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளிலிருந்து பள்ளிக்கு வரும் மாணவா்கள், தங்கள் பகுதிக்கு செல்லும் வழக்கமான பேருந்துகளை தவற விடுவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தோ்வுகளை முன்னதாக தொடங்கி வழக்கமான நேரத்திற்குள் முடிக்கும் வகையில் மாற்றி அமைக்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.