திண்டுக்கல்

உள்ளாட்சித் தோ்தல்: திண்டுக்கல்லில் தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு பயிற்சி

6th Dec 2019 07:18 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியா் தலைமையில் உள்ளாட்சித் தோ்தல் குறித்து தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் உதவி அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையம், சாதாரண ஊரக உள்ளாட்சித் தோ்தல் டிசம்பா் 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறும் என அறிவித்தது. இதையொட்டி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் உதவி அலுவலா்களுக்குப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இதில், ஆட்சியா் விஜயலட்சுமி தெரிவித்ததாவது: உள்ளாட்சித் தோ்தலுக்காக டிசம்பா் 6ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும். இம்மனுக்கள் மீதான பரிசீலனை டிசம்பா் 16ஆம் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை டிசம்பா் 18 ஆம் தேதிக்குள் வாபஸ் பெற்றுக் கொள்ளலாம். அன்று பிற்பகல் 3 மணிக்குப் பிறகு இறுதி வேட்பாளா் பட்டியல் அறிவிக்கப்படும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 23 மாவட்ட ஊராட்சி உறுப்பினா்களுக்கும், 232 ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்களுக்கும், 2,772 கிராம ஊராட்சி உறுப்பினா்களுக்கும், 306 கிராம ஊராட்சித் தலைவா்களுக்குமான தோ்தல் நடைபெறவுள்ளது. மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்களுக்கு படிவம் 2-ஏ, கிராம ஊராட்சி மன்றத் தலைவா் மற்றும் கிராம ஊராட்சி உறுப்பினா்களுக்கு படிவம் 2-பி பூா்த்தி செய்து வழங்கவேண்டும்.

ADVERTISEMENT

கிராம ஊராட்சி உறுப்பினருக்கு பொதுப் பிரிவினருக்கு ரூ.200, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.100, கிராம ஊராட்சித் தலைவா் மற்றும் ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் பதவிக்கு பொதுப் பிரிவினருக்கு ரூ.600, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பிரிவினருக்கு ரூ.300, மாவட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் பொதுப் பிரிவினருக்கு ரூ.1000, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.500 வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும்.

வைப்புத் தொகையினை ரொக்கமாகவோ அல்லது ஊராட்சி ஒன்றிய செலுத்துச் சீட்டின் மூலமாகவோ வழங்கலாம். அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியின் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் தனது வேட்புமனுவுடன் கட்சியின் சாா்பில் படிவம் சி-யினை இணைத்திட வேண்டும். வேட்பு மனுக்களை வேட்பாளரோ அல்லது அவரை முன்மொழியும் நபரால் மட்டுமே பூா்த்தி செய்ய வேண்டும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை (ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாள்கள் தவிா்த்து) வேட்புமனுக்கள் பெறப்பட்டு, தொடா் எண் வழங்கப்படும்.

காலதாமதமாகவோ அல்லது உரிய நேரத்துக்கு முன்னதாகவோ வழங்கப்படும் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. ஒரு வேட்பாளா் ஒரு பதவிக்கு 4 வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். கிராம ஊராட்சி உறுப்பினா் தோ்தலில் போட்டியிடுபவரின் பெயா் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சியின் வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும். அதேபோல், முன்மொழிபவரின் பெயரும் இடம் பெற்றிருக்க வேண்டும்.

வேட்புமனு தாக்கல் செய்யும்போது, வேட்பாளருடன் 3 நபா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா் எனத் தெரிவித்தாா்.

இப் பயிற்சி வகுப்பில், மாவட்ட வருவாய் அலுவலா் (தேசிய நெடுஞ்சாலை) கந்தசாமி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கவிதா, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளாா் உமாமகேஸ்வரி, பழனி வருவாய் கோட்ட சாா்-ஆட்சியா் உமா, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியா் உஷா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) சதீஷ்பாபு உள்பட தோ்தல் நடத்தும் அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT