வேளாண்மைத்துறை சார்பில் கொள்முதல் செய்யப்படும் விதைகளுக்கான பணம் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு 4 முதல் 5 மாதங்கள் தாமதமாக வழங்கப்படுவதால், கூடுதல் விலை மற்றும் மத்திய, மாநில அரசுகளின் ஊக்கத் தொகை வழங்கியும் விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு முழு பலன் கிடைப்பதில்லை என புகார் எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் விவசாயிகள் மூலம் விதைப் பண்ணை அமைத்து, தரமான விதை உற்பத்தி செய்வதற்கு வேளாண்மைத் துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளின் தேவைக்காக, ஆண்டுதோறும் 250 டன் நெல் விதைகள், 100 டன் எண்ணெய் வித்துப் பயிர்களுக்கான விதைகள், 150 டன் பயறு வகைகளுக்கான விதைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த விதை உற்பத்தி செய்யும் பணி 500 ஹெக்டேரில் 300 விவசாயிகள் மூலம் நடைபெறுகிறது. விதை உற்பத்தி செய்யும் விவசாயிகள், விதைப் பண்ணைகளை பதிவு செய்தது முதல் அறுவடை வரையிலும் சம்பந்தப்பட்ட பண்ணைகளில் வேளாண்மை விதைச் சான்றுத்துறை சார்பில் வயல் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அறுவடைக்கு பின் விதைகள் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, அந்த விதைகளின் மாதிரி, விதை பரிசோதனை நிலையத்திற்கு பகுப்பாய்வுக்காக அனுப்பப்படுகிறது. பகுப்பாய்வு முடிவுகள் கிடைக்கப் பெற்ற பின், சம்பந்தப்பட்ட விவசாயிகளின் விதைகளுக்குரிய பணம் கேட்டு, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் மூலம், வேளாண்மைத்துறை இயக்குநருக்கு கருத்துரு அனுப்பப்படுகிறது.
கொள்முதல் செய்யப்பட்ட விதைகளுக்கு மாநில அரசு நிர்ணயித்துள்ள விலையுடன், மத்திய, மாநில அரசுகளின் ஊக்கத் தொகையும் சேர்த்து வழங்கப்படுகிறது. இந்த தொகை சுமார் 4 முதல் 5 மாதங்களுக்கு பின் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு காலதாமதமாக கிடைத்து வருகிறது. இதனால், வட்டிக்கு கடன் பெற்று விதை உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக திண்டுக்கல்லைச் சேர்ந்த விவசாயி ரெங்கராஜன் கூறியதாவது: திருந்திய நெல் சாகுபடி முறையை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, 20 ஏக்கரில் விதை உற்பத்தி செய்யப்பட்ட இடங்களில் தற்போது 5 ஏக்கரில் மட்டுமே விதை உற்பத்தி செய்கிறோம். திருந்திய நெல் சாகுபடி முறையினால், ஏக்கருக்கு 30 கிலோ விதை தேவைப்பட்ட நிலைமாறி தற்போது 5 கிலோ போதுமானதாக உள்ளது. இதனால் விதை உற்பத்தியும் குறைந்துவிட்டது. ஆனாலும், வெளிச் சந்தைகளைவிட, அரசு தரப்பில் விதைகளுக்கு கூடுதல் விலை கிடைக்கிறது. 75 கிலோ நெல் விதைகள் வெளிச்சந்தையில் ரூ.1500-க்கு கொள்முதல் செய்யப்படும் நிலையில், அரசு சார்பில் ரூ.2300 வரை கொள்முதல் செய்கின்றனர். மேலும், மத்திய, மாநில அரசுகளின் ஊக்கத் தொகையும் கிடைக்கிறது.
கடந்த 2015க்கு முன்பு விதைகளின் முளைப்புத் திறன் அறிக்கை பெற்ற பின், சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு கருவூலத் துறை மூலம் பணம் வழங்கப்பட்டது. இதனால் ஏற்படும் காலதாமத்தை தடுக்க, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு விதை மேம்பாட்டு முகமை மூலம் காசோலை வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதிலும் 4 முதல் 5 மாதங்கள் வரை காலதாமதம் ஏற்படுகிறது.
பணம் கிடைப்பதற்கு ஏற்படும் காலதாமதத்தால், விதைகளுக்கு வழங்கப்படும் கூடுதல் விலை மற்றும் அரசு ஊக்கத் தொகையால் விவசாயிகள் முழுமையான பலனை பெற முடிவதில்லை. விவசாயிகளின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, விதை வழங்கப்பட்ட 30 நாள்களுக்குள் பணம் கிடைப்பதற்கு வேளாண்மைத்துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.