பொதுமக்கள் பயன்பெறும் வகையில், மாநில அரசுத் துறை அலுவலகங்களை, சென்னையிலிருந்து திருச்சிக்கு மாற்றுவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்கலாம் என, திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் யோசனை தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ள கோபால்பட்டி பகுதியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகியின் இல்ல விழாவில் பங்கேற்க வியாழக்கிழமை வந்திருந்த திருநாவுக்கரசர், செய்தியாளர்களிடம் பேசியதாவது: ப.சிதம்பரத்தை இழிவுபடுத்தும் நோக்கில் மத்திய அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. அதனை அவர் சட்டரீதியாக எதிர்கொள்வார்.
எம்ஜிஆர் முதல்வராக இருந்த காலத்தில் திருச்சியை தலைநகராக மாற்றுவதற்காக முயற்சித்தார். அந்த வழியைப் பின்பற்றி, மாநில அரசுத் துறை அலுவலகங்களை மட்டும் திருச்சிக்கு மாற்றி அமைத்தால், தமிழகத்தின் தெற்கு, மேற்கு மாவட்ட மக்கள் வந்து செல்வதற்கான பயண நேரம் குறையும். தலைநகரை சென்னையிலிருந்து மாற்றத் தேவையில்லை. இது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.
காஷ்மீர் பிரச்னையில், அங்குள்ள உண்மையான சூழலை நாட்டின் அனைத்துப் பகுதி மக்களும் அறிந்துகொள்ளும் வகையில், எதிர்க் கட்சித் தலைவர்களை பார்வையிடுவதற்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்றார்.