திண்டுக்கல்

பழனி கோயிலில் கும்பாபிஷேகத்தையொட்டி பாலாலய ஏற்பாடுகள் தீவிரம்

29th Aug 2019 09:00 AM

ADVERTISEMENT

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்து பனிரெண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் தற்போது பாலாயத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
 தமிழகத்தின் முதன்மைக் கோயிலாக விளங்குவது பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலாகும்.  இக்கோயிலுக்கு கடந்த 2000-ம் ஆண்டும் பின்னர் 2005-ம் ஆண்டும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
 இந்நிலையில் கும்பாபிஷேகம் முடிந்து பனிரெண்டு ஆண்டுகளுக்கு மேலாக நான்கு ஆண்டுகளாகியும் கும்பாபிஷேகம் நடைபெறாதது பக்தர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி வந்தது. மேலும், பல்வேறு இந்து அமைப்புகளும் பழனிக் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தன.
   கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறநிலையத்துறை அதிகாரிகள் முடிவெடுத்தாலே கும்பாபிஷேகம் என்ற நிலை மாறி, தற்போது நீதிபதிகள் குழு, தொல்லியல் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், கும்பாபிஷேக குழு என பல்வேறு குழுக்கள் கோயில்களை நேரில் ஆய்வு செய்து திட்டமதிப்பீட்டுகளை வழங்கி அதை சீராய்வு செய்த பின்னரே கும்பாபிஷேகத்துக்கு முடிவு எட்டப்படுகிறது. 
       இதனால் பழனிக் கோயில் கும்பாபிஷேகம் பல ஆண்டுகள் தள்ளிப் போனது. இந்நிலையில் வரும் செப்டம்பர் 10, 11, 12 ஆகிய தேதிகளில் கும்பாபிஷேகம் செய்வதற்கு முந்தைய பாலாய நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்த கோயில் நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. 
    பிரமாண்டமான யாகசாலை அமைக்கப்பட்டு நூறு வேதவிற்பன்னர்களை வைத்து யாகம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் பழனி வாழ் பொதுமக்களுக்கும், முருகபக்தர்களுக்கும் மகிழ்ச்சியை தந்துள்ளது. பலமுறை தள்ளி வைக்கப்பட்டு வரும் குடமுழுக்கு ஏற்பாடுகள் இந்த முறையாவது எந்த தடையுமின்றி குறிப்பிட்ட நாளில் பாலாலயம் செய்யப்பட்டு சிறப்பான குடமுழுக்கு நடைபெறவேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT