திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் புதன்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.
ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து தாராபுரம் சாலை பிரிவு வரை திண்டுக்கல்- பழனி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இச்சாலையில் இருபுறமும் கடை நடத்தி வருபவர்கள், தங்களது கடை முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக பந்தல் அமைத்தும், கட்டடங்கள் கட்டியும் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து அதிக அளவில் நடைபெற்று வந்தது. இது குறித்து பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலைத்துறையினருக்கு பலமுறை புகார் அளித்தனர். அதன் பேரில் புதன்கிழமை தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்டப் பொறியாளர் கண்ணன் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தின் மேற்கு பகுதியில் இருந்து தாராபுரம் சாலை பிரிவு வரை சாலையின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ஒட்டன்சத்திரம் நகராட்சி பணியாளர்களும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஒட்டன்சத்திரம் காவல் ஆய்வாளர் சீனிவாசன் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு அளித்தனர்.