கொடைக்கானலில் சுற்றுலா வாகன ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தனியார் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கொடைக்கானல் டி.எஸ்.பி. ஆத்மநாதன் தலைமை வகித்துப் பேசுகையில், வாகன ஓட்டுநர்கள் போக்குவரத்து விதிமுறைகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும், மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டக் கூடாது, குறிப்பிட்ட நபர்களுக்கு மேல் வாகனத்தில் பயணிகளை அமர வைக்கக் கூடாது, இரு சக்கர வாகனங்களில் செல்லும் போது கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும், நமது குடும்பத்தை நினைத்து வாகனங்களை ஓட்ட வேண்டும், மலைச்சாலைகளில் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் செல்ல வேண்டும், உடல் நலத்தை பாதிக்கும் வகையில் வாகனங்கள் ஓட்டக் கூடாது, மிதமான வேகத்தில் செல்வது நல்லது என்றார்.
இந்நிகழ்ச்சியில் கொடைக்கானல் காவல் ஆய்வாளர் ராஜசேகர் முன்னிலை வகித்தார். போக்குவரத்து உதவி ஆய்வாளர் முருகன் வரவேற்றார். உதவி ஆய்வாளர் பொன் குணசேகரன் மற்றும் கொடைக்கானல் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றுவதாக சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.