தனியார் கேபிள் டிவி ஒளிபரப்பை முடக்குவதற்கு திண்டுக்கல் மாவட்ட அரசு கேபிள் டிவி வட்டாட்சியர் முயற்சித்து வருவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு கேபிள் டிவி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கேபிள் டிவி ஒளிபரப்பாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனர்.
இதுதொடர்பாக கூட்டமைப்பின் தலைவர் பி.சேகர் கூறியதாவது:
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியில் அனைத்து தனியார் கேபிள்களையும் எவ்வித முன்னறிவுப்புமின்றி அரசு கேபிள் வட்டாட்சியர் உத்தரவின் பேரில் வெட்டி எறிந்துள்ளனர். இதனால், ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் பணம் செலுத்திய போதிலும், நிகழ்ச்சிகளை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வெட்டப்பட்ட கேபிள்களை சரி செய்தற்காகச் கேபிள் ஆப்ரேட்டர் ஜோதி என்பவர் சென்றபோது, அவரை அரசு கேபிள் ஊழியர்கள் மிரட்டியுள்ளனர். அதையும் மீறி இணைப்பை சரி செய்ய முயன்ற ஜோதி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
அவரது மரணத்திற்கு காரணமான திண்டுக்கல் மாவட்ட கேபிள் டிவி வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த ஜோதியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்க வேண்டும் என்றார்.