திண்டுக்கல்

ரூ.1.65 கோடியில் குடிமராமத்துப் பணிகள்: அமைச்சர் சீனிவாசன் தொடங்கி வைத்தார்

18th Aug 2019 01:09 AM

ADVERTISEMENT

திண்டுக்கல்  மற்றும் நிலக்கோட்டை பகுதிகளில் ரூ.1.65   கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ள குடிமராத்துப் பணிகளை  அமைச்சர்  சி.சீனிவாசன்  சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் குடிமராமத்து திட்டத்தின் கீழ் சிறு பாசனக் குளங்கள் மற்றும் ஊருணிகள் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
இத்திட்டத்தில்   திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் சங்கனனன்  குளம்  என்ற சின்னுஅம்மாள் குளம் மற்றும் செட்டிநாயக்கன்பட்டி மந்தைகுளம் தலா ரூ. 5 லட்சம் மதிப்பீட்டிலும்,  முள்ளிப்பாடி பெரியகுளம்  ரூ.25 லட்சம் மதிப்பீட்டிலும், நிலக்கோட்டை அடுத்துள்ள  பிள்ளையார்நத்தம்  கண்மாய் ரூ.60 லட்சம் மதிப்பீட்டிலும், மட்டப்பாறை கண்மாய் ரூ.70 லட்சம் மதிப்பீட்டிலும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் சீரமைக்கும் பணிகளை அமைச்சர் சீனிவாசன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சிக்கு  மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி தலைமை வகித்தார்.  இதில் நிலக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர்  தேன்மொழி, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் கவிதா, முன்னாள் மேயர்  வி.மருதராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
முன்னதாக நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியது:  திண்டுக்கல் மாவட்டத்தில் 280 சிறுபாசனகுளங்கள் ரூ.14 கோடி மதிப்பீட்டிலும், 380 ஊருணிகள் மற்றும் குட்டைகள் ரூ.3.80 கோடி மதிப்பீட்டிலும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த பணியில் ஆயக்கட்டுதாரர்கள் பங்குகொள்வதுடன் தங்கள் பங்களிப்பாக  10 சதவீத நிதி அல்லது உடல்  உழைப்பை வழங்கவுள்ளனர். இதன் மூலம்  பாசனகுளங்கள் பராமரிப்பில் ஆயக்கட்டுதாரர்களின் ஈடுபாடு உறுதிப்படுத்தப்படும். வடகிழக்கு பருவ மழைக்கு முன்பாக சீரமைப்புப் பணிகளை  துரிதமாக மேற்கொண்டு, மழைநீர் வீணாகாமால்  சேமிக்க நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீராதாரங்களை  மேம்படுத்தும் பணியில்  விவசாயிகளோடு, பொதுமக்களும்  ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்றார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT