மதுரை வட்டத்திற்குள்பட்ட 16 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் கனரா வங்கிகளின் 2019-20 ஆம் ஆண்டுக்கான வர்த்தக இலக்கு ரூ.46,720 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பொது மேலாளர் எம்.பரமசிவம் தெரிவித்தார்.
திண்டுக்கல் மண்டலத்திற்குள்பட்ட 50 கனரா வங்கி கிளைகளின் மேலாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் கனரா வங்கியின் மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு மண்டல மேலாளர் ஜோஸ் வி.முத்தத் தலைமை வகித்தார். கோட்ட மேலாளர் சி.மோகனன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மதுரை வட்ட அலுவலகங்களின் பொதுமேலாளர் எம்.பரமசிவம், உதவி பொதுமேலாளர் சுந்தரபாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பொதுமேலாளர் பரமசிவம் கூறியது: கடந்த ஆண்டு (2019 மார்ச்) மதுரை வட்டத்திற்குள்பட்ட 16 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் கனரா வங்கிகள் மூலம் ரூ.42 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. அதில் ரூ.24 ஆயிரம் கோடிக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ரூ.1,700 கோடி வராக் கடன் பட்டியலில் உள்ளது.
2019-20 ஆம் ஆண்டில் ரூ.46,720 கோடிக்கு வர்த்தக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மண்டலத்தைப் பொருத்தவரை ரூ.4,498 கோடி வர்த்தம் நடைபெற்றுள்ளது. அதில் ரூ.2,848 கோடி கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது. நிகழாண்டு ரூ.3,220 கோடி கடன் தொகை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 2024 ஆம் ஆண்டு ரூ.325 லட்சம் கோடியாக (5 டிரில்லயன் டாலர்) உயர்த்த வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கு வங்கிகள் எந்தெந்த வகையில் உதவியாக இருக்க முடியும் என்ற நோக்கில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. வாகன விற்பனை, நிலம் விற்பனை (ரியல் எஸ்டேட்) தொழில் பாதிப்படைந்துள்ளதோடு, நுகர்வோர் வாங்கும் திறனும் சரிவடைந்துள்ளது. வங்கிகளின் வட்டி விகிதம் கணிசமாக குறைக்கப்பட்டுள்ள போதிலும், கடன் பெறுவோரின் எண்ணிக்கை உயரவில்லை. இதுபோன்ற பொருளாதார தேக்க நிலை உள்ள காலங்களில், சிறு, குறு தொழில்கள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களின் வளர்ச்சிக்கு வங்கிகள் துணை நிற்க வேண்டியது அவசியம். பொதுத்துறை வங்கிகள் எதிர்நோக்கியுள்ள சவால்களுக்கு தீர்வு காண்பது குறித்து, தொழில்நுட்பம் மூலம் பணம் செலுத்துவதை அதிகரித்தல், பொதுத்துறை வங்கிகளின் நிறுவன மேலாண்மை, தொழில்நுட்ப பயன்பாடு, வேளாண் கடன், ஏற்றுமதிக் கடன், சிறு குறு நடுத்தர தொழில் கடன் உள்ளிட்ட 9 தலைப்புகளின் கீழ் கிளை மேலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. அடுத்தக்கட்டமாக சென்னையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் கிளை மேலாளர்களின் கருத்துக்கள் பரிந்துரைக்கப்படும் என்றார்.