திண்டுக்கல்

வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கலன் அமைப்பதில் பொதுமக்கள் அலட்சியம்

11th Aug 2019 01:27 AM

ADVERTISEMENT


பொதுமக்கள் மழைநீர் சேகரிப்பு கலன் அமைப்பதில் அலட்சியம் காட்டுவதால்,  நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கும் நோக்கம் நிறைவேறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழக அரசு கொண்டு வந்த மழைநீர் சேகரிப்பு திட்டத்தை தீவிரப்படுத்த தமிழக அரசு  மீண்டும் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.  திண்டுக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை நிலத்தடி நீர்மட்டம் 900 அடி முதல் 1500 அடிக்கு கீழே இறங்கி விட்டது. மாவட்டம் முழுவதுமுள்ள 6,717 பொதுத்துறைக்கு சொந்தமான கட்டடங்களில், 1377 இல் மட்டுமே மழைநீர் சேகரிப்பு கலன் உள்ளது. 2,722 கட்டங்களிலுள்ள அலகுகளை சீரமைக்கவும், மீதமுள்ள 2,655 கட்டடங்களில் புதிதாக அமைக்க வேண்டிய நிலை இருப்பதாகவும் சில நாள்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகம் பெற்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 இதேபோல் மாவட்டம் முழுவதும்  சுமார் 7 லட்சம் கட்டடங்களில், 10 சதவீத கட்டடங்களில் மட்டுமே ஆக்கப்பூர்வமாக மழைநீர் சேகரிப்பு கலன் அமைக்கப்பட்டுள்ளது. 
திண்டுக்கல் மாநகராட்சியைப் பொருத்தவரை 43,140 கட்டடங்கள் உள்ளன. இதில் 17ஆயிரம் கட்டடங்களில் மட்டுமே மழைநீர் சேமிப்பு கலன் உள்ளதாக தெரியவந்துள்ளது.  பெரும்பாலான வீடுகளில் பெயரளவுக்கு குழி தோண்டி வைத்து அதனை மழைநீர் சேகரிப்பு கலன் என அடையாளம் காட்டும் நிலை உள்ளது. 
திண்டுக்கல்லைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணன் என்பவர் தன் வீட்டில் கிடைக்கும் மழைநீர் மட்டுமின்றி, தெருவில் ஓடி கழிவுநீர் கால்வாயில் கலக்கும் தண்ணீரையும் தடுத்து, கிணற்றுக்கு திருப்பி நிலத்தடி நீரை பாதுகாத்து வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். 
அவர் கூறியது: வீடுகளுக்கு வரும் உறவினர்களிடம், வீட்டு உபயோகப் பொருள்களை காட்டி மகிழ்வதைப் போல் மழைநீர் சேமிப்பு கலனை காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். மழைநீர் சேகரிப்பு கலன் இல்லாத வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு தற்காலிகமாக துண்டிக்கப்படும் என அறிவிப்பு செய்து, இத்திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த அரசு முன் வர வேண்டும் என்றார்.
இதுதொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் ஒருவர் கூறியது: 
மாவட்ட, வட்டார நிலை அரசு அலுவலகங்களில் கூட மழைநீர் சேகரிப்பு கலன் முறையாக அமைக்கப்படுவதில்லை.   இத்திட்டத்தின் நோக்கத்தை முழுமையாக புரிந்து கொள்ளாமல், பெரும்பாலான வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கலனை பெயரளவுக்கு அமைத்து வருகின்றனர்.  மக்களின் மனநிலை மாறினால் மட்டுமே மழைநீர் சேமிப்புத் திட்டம் முழுமையாக வெற்றி பெறும் என்றார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT