திண்டுக்கல்

தாண்டிக்குடியில் அவக்கோடா பழ சாகுபடி விவசாயிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்

11th Aug 2019 01:27 AM

ADVERTISEMENT


தாண்டிக்குடியில் அவக்கோடா பழ சாகுபடி பாதிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை  நடைபெற்றது.
கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான பண்ணைக்காடு, தாண்டிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் அவக்கோடா பழம் விளைவிக்கப்பட்டு வருகிறது.  இந் நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக இம் மரத்தில் இலைகள் கருகியும், விளைச்சல் குறைந்தும் விவசாயிகள் பாதிப்படைந்து வந்தனர். இதையடுத்து மலைவாழை விவசாயிகள் சங்க கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு வோளாண் பல்கலைக் கழகம்  சார்பில் தாண்டிக்குடியிலுள்ள காபி ஆராய்ச்சி மைய அரங்கில் இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு  வேளாண் பல்கலைக் கழக துணைவேந்தர் என்.குமார் தலைமை வகித்து பேசியது:
இப்பகுதிகளில் விளையக் கூடிய அவக்கோடா 5 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை விளைச்சல் தரக்கூடியது. கடந்த 2 ஆண்டுகளாக அதன் வளர்ச்சி குறைந்து வருவதாகவும், இலைகள் கருகி வருவதாகவும் விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து ஆய்வு நடத்தியதில் வேர்ப்புழு நோய், தண்டு துளைப்பான் நோய், வாடல் நோய், பின் கருகல் நோய் போன்றவற்றால் விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகள் தாண்டிக்குடியிலுள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்திலுள்ள அதிகாரிகளை தொடர்பு கொண்டால் அவர்கள் தொழில் நுட்ப ஆலோசனைகளை வழங்குவர்.  தற்போது அவக்கோடா பழத்திற்கு கர்நாடகா, உத்தரகாண்ட், கோவா போன்ற  மாநிலங்களில் நல்ல வரவேற்புள்ளது. வடமாநில விவசாயிகள் இதை சாகுபடி செய்வதற்கு ஆர்வம் காட்டி  வருகின்றனர்.  மேலும், இப்பகுதி விவசாயிகளுக்கு நாக்பூர் ஆரஞ்சு நாற்றுகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதில் தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கூட்டமைப்பைச்  சேர்ந்த வீரஅரசு, சேகர், நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தாண்டிக்குடி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் பாபு நன்றி கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT