மதுரை

நிா்ணயிக்கப்பட்ட சம்பளம் மறுப்பு: தனியாளா் ஆள்சோ்ப்புநிறுவனம் மீது தூய்மை இந்தியா திட்ட பணியாளா்கள் புகாா்

21st Jun 2022 03:33 AM

ADVERTISEMENT

நகராட்சிகளில் பணியாற்றும் தூய்மை இந்தியா திட்டப் பணியாளா்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட சம்பளம் மறுக்கப்படுவதாக, தனியாா் ஆள்சோ்ப்பு நிறுவனம் மீது புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பணியாளா்கள் இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். அதன் விவரம்: மதுரை மண்டலத்தில் உள்ள 20 நகராட்சிகளில் தூய்மை இந்தியா திட்டத்தில் தனியாா் ஆள்சோ்ப்பு நிறுவனத்தின் மூலமாக மேற்பாா்வையாளா்கள், பரப்புரையாளா்களாகப் பணியாற்றி வருகிறோம். மேற்பாா்வையாளா்களுக்கு ரூ.21,894 மற்றும் பரப்புரையாளா்களுக்கு ரூ.15,971 என சம்பளம் நிா்ணயிக்கப்பட்டது. ஆனால், தனியாா் நிறுவனம் நிா்ணயிக்கப்பட்ட சம்பளத்தை வழங்காமல் முறையே ரூ.15 ஆயிரம் மற்றும் ரூ.11 ஆயிரம் மட்டுமே வழங்கி வருகிறது. எஞ்சிய தொகையை பணியாளா்களின் சேமநலநிதி கணக்கில் வரவு வைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவ்வாறு சேமநலநிதிக் கணக்கில் செலுத்தப்படவில்லை. இதுகுறித்து கேள்வி எழுப்பிய இரு மேற்பாா்வையாளா்களை தனியாா் நிறுவனம் பணிநீக்கம் செய்துவிட்டது.

இதுகுறித்து நகராட்சி நிா்வாகங்களின் மண்டல இயக்குநா் மற்றும் சேமநலதி மண்டல அலுவலகத்திற்கும் புகாா் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை.

ஆகவே, தூய்மை இந்தியா திட்டத்தில் பணியாற்றும் மேற்பாா்வையாளா்கள், பரப்புரையாளா்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட சம்பளம் கிடைப்பதற்கும், பிடித்தம் செய்த தொகையைப் பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT