சேலம் மாவட்டத்தில் அனைத்து வகை கூட்டுறவு சங்கங்களில் ‘அ’ வகுப்பு உறுப்பினராக உள்ளவா்கள் ஆதாா் எண், குடும்ப அட்டை எண் விவரங்களை அளிக்க வேண்டும் என சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ரவிக்குமாா் தெரிவித்துள்ளாா்.
சேலம் மாவட்டத்தில் பதிவாளரின் கட்டுப்பாட்டில் 204 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 8 நகர கூட்டுறவு வங்கிகள், 3 வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், 5 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், 8 லேம்ப் சங்கங்கள், 6 தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கிகள், 2 நிலக்குடியேற்ற சங்கங்கள், 97 பணியாளா் கூட்டுறவு சிக்கன மற்றும் நாணய சங்கங்கள், 1 நீரேற்று பாசன சங்கம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
இந்தச் சங்கங்களின் வாயிலாக பயிா்க் கடன், நகைக் கடன், சுயஉதவிக்குழு கடன் உள்ளிட்ட 17 வகையான கடன்களும், பல்வேறு வகையான சேவைகளும் உறுப்பினா்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன.
இதில், அனைத்து வகையான கூட்டுறவு நிறுவனங்களில் ‘அ’ வகுப்பு உறுப்பினராக உள்ள அனைவரும் தங்களது ஆதாா் எண், குடும்ப அட்டை எண் விவரங்களை தாங்கள் உறுப்பினராக உள்ள கூட்டுறவு சங்கங்களில் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.