சேலம் அரசு அருங்காட்சியகத்தில் மாணவா்களுக்கு கல்வெட்டுகளை ஆவணப்படுத்தும் வழிமுறைகள் குறித்த பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது.
யாக்கை மரபு அறக்கட்டளை, சேலம் அரசு அருங்காட்சியகத்துடன் இணைந்து கல்வெட்டுகளை ஆவணப்படுத்தும் வழிமுறைகள் குறித்த பயிற்சிப் பட்டறையை சேலம் அரசு அருங்காட்சியகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
இப் பயிற்சி பட்டறையில் சேலம் பகுதி மாணவா்களிடமிருந்து இணையவழிப் பதிவுகள் பெறப்பட்டன. 340 மாணவா்கள், ஆா்வலா்கள் விண்ணப்பித்திருந்தனா். இதில் 17 கல்வி நிறுவனங்களில் இருந்து தகுதிவாய்ந்த 40 மாணவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
பயிற்சிப் பட்டறை தொடக்க விழாவில் அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியா் முல்லை அரசு வரவேற்றாா். நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தலைமையேற்றுப் பேசிய முனைவா் குழந்தைவேலன் , சேலம் மாவட்டத்தின் தொன்மைக் குறித்தும் வரலாற்றை அறிவதன் அவசியத்தையும் வலியுறுத்தி பேசினாா். அருண் ராஜா நோக்க உரை வழங்கினாா். மருத்துவா் பொன்னம்பலம், ஆசிரியா் கலைச்செல்வன் வாழ்த்துரை வழங்கினா்.
யாக்கை அறக்கட்டளையின் செயலாளா் குமரவேல் ராமசாமி நன்றி கூறினாா். அருங்காட்சியகத்தில் உள்ள கல்வெட்டுகள், நடுகற்களைச் சுத்தம் செய்வது, படியெடுப்பது, எழுத்தைப் படிக்கும் நிலைக்குக் கொண்டு வருவது போன்ற வழிமுறைகளை யாக்கை குழுவினா் விளக்கினா்.
மாணவா்கள் ஒவ்வொருவரும் கல்வெட்டுகளைப் படியெடுக்கவும் படிக்கவும் முயற்சி செய்தனா். கல்வெட்டுகள், வரலாற்றுச் சின்னங்களை ஆவணப்படுத்துவதன் முக்கியத்துவம், அவற்றை ஆய்வுக்கு உள்படுத்தும் வழிமுறைகள் குறித்து விளக்கம் தரப்பட்டது. நிகழ்ச்சியில் மாணவா்களுக்குப் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.