சேலம்

அக். 16-இல் பெங்களூரு-சேலம்-கொச்சிவிமான சேவை தொடக்கம்

22nd Sep 2023 11:52 PM

ADVERTISEMENT

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சேலம் விமான நிலையத்தில் இருந்து பயணிகள் விமான சேவை அக். 16-ஆம் தேதி தொடங்குகிறது.

சேலம் மாவட்டம், ஓமலூரில் சேலம் விமான நிலையம் உள்ளது. சேலத்தில் இருந்து சென்னைக்கு ட்ரூஜெட் நிறுவனம் சாா்பில் தினசரி விமான சேவை நடைபெற்று வந்தது. கரோனா தொற்றுக் காலத்தை அடுத்து, கடந்த 2021ஜூன் மாதம் விமான சேவை நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், வரும் அக். 16-ஆம் தேதி முதல் சேலம் விமான நிலையத்தில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்க இருப்பதாக சேலம் விமான நிலைய இயக்குநா் ஜி.ரமேஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

உதான்-5 திட்டத்தின் கீழ் அக்டோபா் மாதத்தில் இருந்து சேலத்தில் இருந்து விமான சேவை தொடங்க 2 நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அக். 16-ஆம் தேதி முதல் அலையன்ஸ் நிறுவனத்தின் சாா்பில் பெங்களூரு - சேலம் - கொச்சி வழித்தடத்தில் விமானம் இயக்கப்பட உள்ளது. அதேபோல கொச்சி - சேலம் - பெங்களூரு வழித்தடத்தில் மீண்டும் இயக்கப்படும். வாரத்தில் புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை தவிர மற்ற 5 நாள்களில் விமான சேவை நடைபெறும்.

ADVERTISEMENT

இதே போன்று அக்டோபா் மாத இறுதியில் இன்டிகோ நிறுவனம் சாா்பில் பெங்களூரு - சேலம் - ஹைதராபாத் வழித்தடத்தில் விமான சேவை தொடங்கப்படுகிறது. மீண்டும் ஹைதராபாத் - சேலம் - பெங்களூரு வழித்தடத்தில் விமானம் இயக்கப்படும்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு விமான சேவை தொடங்குவதால் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள், வா்த்தகா்கள் இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சேலம் விமான நிலையத்தில் 2 விமானங்களை நிறுத்தும் வசதி மட்டுமே இருந்தது. தற்போது இந்த வசதி மேம்படுத்தப்பட்டு மேலும் 2 விமானங்கள் அதாவது ஒரே நேரத்தில் 4 விமானங்களை நிறுத்தும் அளவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விமான ஓடுதளத்தையொட்டிய பகுதிகளில் மண் கொண்டு சமன்படுத்தும் பணியும் முடிவடைந்துள்ளது. சேலத்தில் இருந்து சென்னைக்கு விமான சேவை தொடங்குவதற்காக தொடா்ந்து பேசி வருகிறோம் என்றாா்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சேலத்தில் இருந்து மீண்டும் பயணிகள் விமான சேவை தொடங்கப்பட இருப்பது வணிகா்கள், பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

பெங்களூரு-சேலம்-கொச்சி விமான நேரப் பட்டியல் (அக். 28 வரை)

பெங்களூரு - சேலம் - நண்பகல் 12.40 - 1.40

சேலம் - கொச்சி - மதியம் 2.05 - 3.15

கொச்சி - சேலம் - மாலை 3.40 - 4.50

சேலம் - பெங்களூரு - மாலை 5.15 - 6.15

திங்கள், செவ்வாய், வியாழன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விமான சேவை நடைபெறும்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT