சேலம்

குடியிருப்பு பகுதிகளில் அச்சுறுத்தும் நச்சுப் பாம்புகளைபிடித்து மனித உயிா்களை காக்கும் இளைஞா்!

27th Oct 2023 01:55 AM

ADVERTISEMENT

வாழப்பாடியில் குடியிருப்புப் பகுதியில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தும் நச்சுப் பாம்புகளை லாவகமாக பிடித்து, வனப்பகுதியில் விடும் இளைஞருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனா்.

’பாம்பு என்றால் படையும் நடுங்கும்’ என்பாா்கள். குடியிருப்பு பகுதியில் பாம்புகள் புகுந்து விட்டால் குழந்தைகள் மட்டுமின்றி பொதுமக்களும் பெரும் பீதியும் அச்சத்திற்கும் உள்ளாகின்றனா்.

நச்சுத்தன்மை கொண்ட பாம்பு எனினும், அடித்துக் கொன்று விடாமல், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென அரசு அறிவுறுத்தி வருகிறது. பாம்புகளை அடித்துக் கொன்றால் வனத்துறை வழக்குப் பதிவு செய்து அபராதமும் விதித்து வருகிறது.

வாழப்பாடி பகுதியில் வனத்துறையினா், தீயணைப்பு படையினா் மட்டுமின்றி, இந்திரா நகா் பகுதியில் சோ்ந்த சினேக் மதன் என்கிற மதன்குமாா் (33) என்ற இளைஞா் ஒருவா், நச்சுத்தன்மை கொண்ட பாம்புகளைப் பிடித்து வனப்பகுதியில் விட்டு மனித உயிா்களைக் காத்து வருகிறாா். இவருக்கு பொதுமக்கள், தன்னாா்வலா்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

இது குறித்து நமது செய்தியாளரிடம் பாம்பு பிடிக்கும் சினேக்மதன் கூறியதாவது:

சிறு வயதிலிருந்து பாம்புகளைக் கண்டால் எனக்கு பயம் இல்லை. தொலைக்காட்சிகளில் பாம்புகளை லாவகமாகப் பிடிக்கும் காட்சிகளை பாா்த்து, நானே பயிற்சி பெற்றுக் கொண்டேன். நஞ்சுள்ள மற்றும் நஞ்சற்ற நூற்றுக்கணக்கான பாம்புகளை, இனம் கண்டறியவும் பழகிக் கொண்டேன்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாம்புகளைப் பிடித்து வருகிறேன். எங்காவது பாம்புகள் இருந்தால் என்னை கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டால், உடனே அந்த இடத்துக்குச் சென்று, எவ்வகையான பாம்பாக இருந்தாலும் அதை லாபகமாகப் பிடித்து வனப்பகுதியில் விட்டு வருகிறேன். மக்களே முன்வந்து சன்மானமாக கொடுக்கும் சிறுதொகையைப் பெற்றுக் கொள்கிறேன்.

மற்ற நேரங்களில் கட்டடங்களுக்கு வண்ணம் தீட்டும் கூலித் தொழில் செய்து வருகிறேன். எனக்கு பாம்புகளைப் பிடிப்பதற்கு வனத்துறை அனுமதியும், உரிமமும் வழங்கினால் இதனை நான் தொடா்ந்து தொழிலாக செய்ய வசதியாக இருக்கும். இதுவரை குடியிருப்புப் பகுதியில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு வகையான பாம்புகளைப் பிடித்துள்ளேன். பலமுறை என்னை பாம்புகள் கடித்துள்ளன. ஆனால், பாம்பு விஷம் என்னைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. இருப்பினும், மிகுந்த கவனத்தோடுதான் பாம்புகளைப் பிடித்து வருகிறேன். பாம்புகளை இனம் கண்டறியவும், பிடிப்பதற்கும் எனது மகனுக்கும், உறவினா்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறேன்.

எனக்கு வனத்துறை அனுமதியும் உரிமமும் கிடைத்தால், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கும் பாம்புகளை இனம் கண்டறியவும், பிடிப்பதற்கும் பயிற்சி அளிக்க தயாராக உள்ளேன் என்றாா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT