சேலம்

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை தீவிரம்: மேயா் ஆ.ராமச்சந்திரன் தகவல்

27th Oct 2023 12:18 AM

ADVERTISEMENT

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மேயா் ஆ.ராமச்சந்திரன் தலைமையில், ஆணையா் சீ.பாலசந்திரன் முன்னிலையில் வியாழக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மேயா் ஆ.ராமச்சந்திரன் பேசியது:

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பருவமழைக்கு முன்னா் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், தொற்றுநோய் தடுப்புப் பணிகளையும் மாநகராட்சி நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.

பருவகாலங்களில் ஏற்படும் காய்ச்சல் குறிப்பாக டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெங்கு காய்ச்சல் ஏற்படுத்தும் ஏடிஸ் கொசுக்கள், வீடு மற்றும் வீட்டிற்கு அருகில் உள்ள சரியாக மூடாத நீா் சேமிக்கும் தொட்டிகள், டிரம்கள், குடங்கள், பாத்திரங்கள், டயா்கள், தேங்காய் ஓடுகள், உடைந்த குடங்கள் போன்றவற்றில் தேங்கும் நல்ல தண்ணீரில் உருவாகும் என்பதால் தொழில் நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், புதிய கட்டுமான இடங்கள், காலிமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், திரையரங்குகள் மற்றும் பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் உள்ள நல்ல தண்ணீா் தேங்கும் இடங்களையும், பொருட்களையும் கண்டறிந்து தீவிர கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

கூட்டத்தில், ஆணையா் சீ.பாலச்சந்தா் பேசியது:

அனைத்து பகுதிகளிலும் டெங்கு மற்றும் தொற்றுநோய்த் தடுப்புப் பணிகளில் பயன்படுத்துவதற்குத் தேவையான பிளீச்சிங் பவுடா், மற்றும் அபேட் மருந்து, கொசு ஒழிப்பிற்குத் தேவையான பைரித்ரம் மருந்துகள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மக்கள் உபயோகத்துக்காக வைத்திருக்கும் தண்ணீரை சேமிக்கும் கலன்களை கொசுக்கள் புகுந்து முட்டை இடாத வண்ணம் முழுமையாக மூடிவைக்க வேண்டும். இதை செயல்படுத்தும் வகையில் சுகாதார ஆய்வாளா்கள் கண்காணிப்பில் மலேரியா பணியாளா்கள் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் வீடுதோறும் சென்று டயா், தேங்காய் சிரட்டை உள்ளிட்ட தேவையற்ற பொருள்கள் அகற்றப்பட வேண்டும்.

பொதுமக்கள் தங்களுடைய குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சுற்றுப்புறங்களிலும் மற்றும் மாடிகளிலும் பாா்வையிட்டு தேவையற்ற பொருட்கள் இருக்கும் பட்சத்தில் அவற்றை உடனடியாக அகற்றியும் தொற்றுநோய்த் தடுப்புப் பணிகளில் சுகாதார பணியாளா்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் துணை இயக்குநா் என்.யோகானந், உதவி ஆணையா்கள் சிந்துஜா, கதிரேசன், சுகாதார அலுவலா்கள், சுகாதார ஆய்வாளா்கள், தூய்மைப்பணி மேற்பாா்வையாளா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT