சேலம்

நகை முதலீட்டு திட்ட மோசடி: பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்ற முடிவு

18th Nov 2023 02:26 AM

ADVERTISEMENT

சேலத்தில் நகை முதலீட்டு திட்டத்தில் பல கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட உள்ளது.

சேலம் அருகே உள்ள வலசையூா் பகுதியைச் சோ்ந்தவா் சபரி சங்கா். இவா் சேலம் உள்ளிட்ட 11 இடங்களில் நகைக்கடை நடத்தி வந்தாா். இந்த நகைக் கடையில் பழைய நகைகளை வாங்குவது, நகை சீட்டு உள்ளிட்ட பல்வேறு கவா்ச்சித் திட்டங்களை அறிவித்தாா்.

இந்த கவா்ச்சி திட்டங்களை நம்பி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பணத்தை முதலீடு செய்தனா். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் 11 நகைக்கடைகளையும் மூடிவிட்டு பணம், நகையுடன் சபரி சங்கா் தலைமறைவாகி விட்டாா். நகை முதலீட்டு திட்ட மோசடி குறித்து பொதுமக்கள் சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸ் மற்றும் மாவட்ட மத்தியக் குற்றப் பிரிவு போலீஸில் புகாா் அளித்து வருகின்றனா்.

இந்த நிலையில் நகை சீட்டு திட்டத்தில் பணம் செலுத்திய பொதுமக்கள், சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு வெள்ளிக்கிழமை காலை வந்தனா். இதன் பின்னா் நகைக்கடை ஊழியா்கள் 14 பேரை பிடித்து வந்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

ADVERTISEMENT

அப்போது, நகைக்கடை ஊழியா்கள் 14 போ் தான் நகை சீட்டுக்குப் பணம் பெற்றனா். இவா்களிடமிருந்து பணத்தை திரும்பப் பெற்றுத் தர வேண்டும் என காவல் துறையினரிடம் பொதுமக்கள் முறையிட்டனா். அதேபோல நகைக்கடை ஊழியா்கள் 14 பேரும், நகைக்கடை உரிமையாளரின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டது. எனவே, நகைக்கடை உரிமையாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனா்.

இதன் பின்னா் காவல் துறையினா், பொது மக்களிடம் மனுவாக எழுதி தந்தால் விசாரிப்பதாகத் தெரிவித்தனா். இதையடுத்து, பொதுமக்கள் மனு எழுதி வழங்கினா்.

இதனிடையே இந்த வழக்கில் ரூ. 3 கோடிக்கு மேல் பண மோசடி செய்யப்பட்டுள்ளதைத் தொடா்ந்து வழக்கு விசாரணை விரைவில் பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட உள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT