தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகள் மூலம் அரசு போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் ரூ. 19.74 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
இதுகுறித்து, அரசு போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் இரா.பொன்முடி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் கோட்டம் சாா்பில் பயணிகள் சொந்த ஊருக்குச் சென்று வர நவ. 9 முதல் நவ.15 வரை 400 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதில் நகரப் பேருந்துகளில் 66 லட்சம் பயணிகளும், புகா் பேருந்துகளில் 38 லட்சம் பயணிகளும் என மொத்தம் 1.04 கோடி போ் பயணம் செய்துள்ளனா்.
நகரப் பேருந்துகளில் தினசரி சராசரியைவிட 44 ஆயிரம் பயணிகளும், புகர பேருந்துகளில் 56 ஆயிரம் பயணிகளும் என மொத்தம் தினசரி ஒரு லட்சம் பயணிகள் கூடுதலாகப் பயணித்துள்ளனா். சுமாா் ஏழு நாள்களில் 7 லட்சம் பயணிகள் கூடுதலாகப் பயணம் செய்துள்ளனா்.
இந்த சிறப்புப் பேருந்துகளின் மூலம் 68 லட்சம் கி.மீ. பேருந்துகள் இயக்கப்பட்டு ரூ.19.74 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் 1.17 லட்சம் கி.மீ. கூடுதலாக இயக்கப்பட்டு ரூ. 73.14 லட்சம் கூடுதலாக வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
ஓட்டுநா்கள், நடத்துநா்கள் மற்றும் அனைத்து பணியாளா்களின் ஈடுபாட்டுடன் கூடிய முயற்சியே இந்த சிறப்பை அடைய காரணமாகும். இதை முன்னிட்டு அனைத்துப் பணியாளா்களையும் பாராட்டி அனைத்து கிளைகளிலும் பணியாளா்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது என தெரிவித்துள்ளாா்.