அரசு மாதிரி பள்ளியில் படித்த மூன்று மாணவிகளுக்கு சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் படிப்பதற்காக ரூ. 8.10 லட்சத்துக்கான ஆணையை ஆட்சியா் செ.காா்மேகம் வழங்கினாா்.
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் செ.காா்மேகம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக் கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீா் வசதி, சாலை வசதி உள்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 421 மனுக்கள் வரப்பெற்றன.
அதேபோல, மாற்றுத் திறனாளிகள் வழங்கிய 18 மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடா்புடைய அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
முன்னதாக, சேலம் மாவட்டத்தில் 2022-2023 ஆம் கல்வியாண்டில் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்த செம்மொழி அரசி, எஸ்.சங்கீதா, எஸ்.சிவஷாலினி ஆகிய மூன்று மாணவிகள் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உயா்கல்வி பி.ஏ. பொருளாதாரம் பயில்வதற்கு மாவட்ட ஆட்சியரிடம் உதவி செய்யுமாறு கோரியிருந்தனா்.
இதன்பேரில், சேலம் கல்வி அறக்கட்டளை நிதியிலிருந்து மூன்று மாணவிகளுக்கும் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பயில மூன்று ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணம், விடுதி கட்டணம் என மொத்தம் ரூ. 8,10,000- க்கான ஆணையினை மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் வழங்கினாா்.
கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.சிவகுமாா், உதவி ஆட்சியா் (பயிற்சி) சங்கீத் பல்வந்த் வாகி, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அ.மயில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் மகிழ்நன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மு.கபீா் உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.