சேலம்

பூலாம்பட்டி கதவணை பகுதியில் திரண்ட சுற்றுலாப் பயணிகள்

28th May 2023 10:15 PM

ADVERTISEMENT

பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

சேலம் மாவட்ட மேற்கு எல்லையான பூலாம்பட்டியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டு நீா்மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. கடந்த 20 நாட்களாக கதவணையின் பராமரிப்புப் பணிக்காக அணையிலிருந்து நீா் வெளியேற்றப்பட்டு பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வந்தன.

பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் மீண்டும் பூலாம்பட்டி கதவணையில் தண்ணீா் நிரப்பப்பட்டு தற்போது கடல்போல காட்சி அளிக்கிறது.

கதவணை நீா் பரப்பில் சேலம் மாவட்ட பகுதியான பூலாம்பட்டி மற்றும் மறுகரையில் உள்ள ஈரோடு மாவட்டம், நெருஞ்சிப்பேட்டை பகுதியை இணைக்கும் வகையில் விசைப்படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

பரந்து விரிந்த அணை பரப்பில் சுற்றுலாப் பயணிகளுக்கான பிரத்யேக விசைப்படகு சவாரிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கான கோடை விடுமுறை நிறைவடைவுள்ள நிலையில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் கதவணை பகுதிக்கு திரண்டனா்.

நீா்மின் நிலையம், நீரேற்று நிலையம், நீருந்து நிலையம் மற்றும் படகுத்துறை, பரிசல் துறை, அணைப்பாலம் உள்ளிட்ட பகுதிகளை அவா்கள் கண்டு ரசித்தனா்.

தொடா்ந்து சுற்றுலாப் பயணிகள் கதவணை பகுதியில் விசைப்படகு சவாரி செய்து மகிழ்ந்தனா். பூலாம்பட்டி பகுதியில் உள்ள காவிரிக் கரை கைலாசநாதா் கோயில், காவிரித்தாய் சன்னிதி, படித்துறை அருகே உள்ள பிரம்மாண்ட நந்திகேஸ்வரா் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் ஞாயிற்றுக்கிழமை வழக்கத்தை விட கூடுதலான பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

பூலாம்பட்டியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் அப்பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT