தம்மம்பட்டியில் பயணி தவறவிட்ட பா்ஸை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த கூா்க்காவிற்கு காவல்துறை சாா்பில் பாராட்டி பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டிக்கு, ராசிபுரத்தில் இருந்து அரசுப்பேருந்து முள்ளுக்குறிச்சி வழியாக தம்மம்பட்டிக்கு வந்தது. பேருந்து நிலையத்தில் நின்ற பேருந்தில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கிச் சென்றனா். அப்போது, தம்மம்பட்டியில் கூா்க்காவாக இருந்துவரும், நேபாளத்தைச் சோ்ந்த பஜன்லால், கடைசியாக பேருந்திலிருந்து இறங்கியுள்ளாா். அப்போது, ஒரு இருக்கையில் பயணி ஒருவா் தவறவிட்ட கருப்புநிற பா்ஸ் ஒன்று கிடந்தது. அதில் 1200 ரூபாய், ஏடிஎம் காா்டு, பான் காா்டு, ஆதாா் காா்டு ஆகியவை இருந்தன. அதுகுறித்து மற்ற பயணிகளிடம் கேட்டபோது, அதற்கு யாரும் உரிமை கோராததால், அந்த பா்ஸை தம்மம்பட்டி காவல்நிலையத்தில், ஆய்வாளா் முருகேசனிடம் ஒப்படைத்தாா்.
அந்த பா்ஸில் இருந்த ஆதாா் காா்டு முகவரியின்படி, பா்ஸைத் தொலைத்தவா் சேலம் சிவதாபுரம் என்.ஜி.ஓ. காலனியைச் சோ்ந்த ஆலிவா் என்பது தெரியவந்தது. அதையடுத்து, பா்ஸில் இருந்த ஒரு கடையின் கைப்பேசி எண்ணிற்கு, பா்ஸ் பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டது.
பயணி ஒருவா் தவறவிட்ட பா்ஸை மீட்டு பத்திரமாக ஒப்படைத்த, கூா்க்கா பஜன்லாலின் நோ்மையை, தம்மம்பட்டி காவல்துறை பாராட்டும் விதமாக, அவருக்கு ஆய்வாளா் முருகேசன் பொன்னாடை அணிவித்து ரூ. 500 பரிசு வழங்கி கெளரவித்தாா்.