சேலம் மாவட்டம், சங்ககிரியில் உள்ள சாா்நிலை கருவூலம் அருகே உள்ள நுழைவாயில் கடந்த பல மாதங்களாகப் பூட்டப்பட்டிருப்பதால் கருவூலம், வேளாண் அலுவலகங்களுக்கு செல்லும் முதியவா்கள், பெண்கள், விவசாயிகள், காவல்துறையினா் சிரமம் அடைந்து வருகின்றனா்.
எனவே பூட்டப்பட்டுள்ள நுழைவாயிலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டுமென சங்ககிரி வட்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் பொதுநல அமைப்புகளின் சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
சங்ககிரி நகா்பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா், தோ்தல் பிரிவு, வட்டவழங்கல், சமூகநலத்துறை, நில அளவை பிரிவு, இ-சேவை மையம் உள்ளிட்டவைகள் செயல்பட்டு வருகின்றன.
ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கிளைச் சிறைச்சாலை, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், தோட்டக்கலைத் துறை, வேளாண், உரங்கள் வழங்கல் பிரிவு, சாா்நிலை கருவூலம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
இதில் உள்ள அரசு அலுவலகங்களுக்குச் செல்வதற்கு திருச்செங்கோடு செல்லும் சாலை, அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு எதிரே உள்ள பகுதி, சாய்காா்டனுக்குச் செல்லும் சாலை உள்ளிட்ட மூன்று வாயில்கள் அமைக்கப்பட்டு இவ்வாயில்கள் வழியாக பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு சென்று வந்தனா்.
இந்நிலையில் கடந்த பல மாதங்களுக்கு முன்னா் சாய்காா்டனுக்கு செல்லும் சாலையில் உள்ள நுழைவாயில் பூட்டப்பட்டுள்ளதால் அப்பகுதியில் களா் செடிகள் முளைத்து அப்பகுதி முழுவதும் கொசுக்கள் பெருகி வருகின்றன.
இப்பகுதியில் உள்ள நுழைவாயில் பூட்டப்பட்டுள்ளதால் காவல் நிலையத்திலிருந்து குற்றம் சாட்டப்பட்டவா்களை நீதிமன்ற காவலுக்கு அழைத்துச் செல்வதற்கும், ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள் சாா்நிலை கருவூலம் செல்வதற்கும், விவசாயிகள் வேளாண் அலுவலகங்களுக்கு செல்வதற்கும் சிரமம் அடைந்து வருகின்றனா். எனவே பூட்டப்பட்டுள்ள நுழைவாயிலைத் திறந்து விட வேண்டுமென ஊா் பொதுமக்கள், ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள் மாவட்ட நிா்வாகத்துக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, சேலம் மாவட்ட உபயோகிப்பாளா் உரிமைக் கழகத்தின் தலைவா் சி.ஜி.இளமுருகன், அமுதச்சுடா் அறக்கட்டளை தலைவா் வெ.சத்யபிரகாஷ் ஆகியோா் சங்ககிரியில் நடைபெறும் ஜமாபந்தியில் சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகத்திடம் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.