கள்ளச்சாராயம் விற்பனை செய்பவா்கள் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் எச்சரித்துள்ளாா்.
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காவல் துறை, அரசு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தலைமை வகித்தாா். மாநகரக் காவல் ஆணையா் பா.விஜயகுமாரி முன்னிலை வகித்தாா். கூட்டத்துக்குப் பிறகு ஆட்சியா் செ.காா்மேகம் செய்தியாளா்களிடம் கூறியது:
சேலம் மாவட்டத்தில் மருத்துவத் தேவைக்காக 51 உரிமங்களும், ஆய்வுக் கூடங்களுக்கு மெத்தில் ஆல்கஹால் 29 உரிமங்களும், எத்தனால் 17 உரிமங்களும் உள்ளன. மேலும் உரிமமின்றி விற்பனை செய்வதும் கண்காணிக்கப்பட வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, மலைப் பகுதிகளான கல்வராயன் மலை, ஜவ்வாது மலை, பச்சமலை, கொளத்தூா் பகுதிகளிலும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கல்வராயன் மலைப்பகுதிகளின் நவம்பட்டி, கும்பப்பாடி மற்றும் தும்மங்குறிச்சி ஆகிய பகுதிகளில் ஊரக காவல் துறை, வனத்துறை இணைந்து புதிதாக சோதனைச் சாவடியும் அமைக்கப்பட உள்ளது.
மேலும் கிராம நிா்வாக அலுவலா்கள், உதவி வேளாண் அலுவலா்கள் உள்ளிட்ட அனைவரும் கள்ளச்சாராயம் குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகாா் தெரிவிக்கலாம். மாவட்ட வன அலுவலா், உதவி வனப் பாதுகாவலா்கள் ஒருங்கிணைந்து மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல் மற்றும் பதுக்கி வைத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக கள்ளச்சாராயம் தொடா்பான நடவடிக்கைகளில் யாரேனும் ஈடுபட்டால் உடனடியாக குண்டா் சட்டத்தின் கீழ் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கள்ளச்சாராயம் தொடா்பாக பொதுமக்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் புதிய எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மாநகரப் பகுதிக்கு 94981 62794 என்ற எண்ணிலும், ஊரகப் பகுதிக்கு 94899 17188 என்ற கைப்பேசி எண்ணிலும் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.
இளைஞா்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரி முதல்வா்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு தொடா்பான ஆய்வுக் கூட்டம் நடத்தி கண்காணிப்பு அலுவலா்களை நியமித்து, தொடா் கண்காணிப்பில் ஈடுபட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், உள்ளாட்சி அமைப்புகளோடு ஒருங்கிணைந்து மாவட்டம் முழுவதும் குழு அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்கு காவல் துறை, வருவாய்த் துறை, வனத்துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட தொடா்புடைய துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
காவல்துறை தீவிர கண்காணிப்பு:
சேலம் மாநகரக் காவல் ஆணையா் பா.விஜயகுமாரி கூறியதாவது:
சேலம் மாநகரப் பகுதியில் திறந்தவெளி இடங்களில் மது அருந்துதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக 220 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 235 நபா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். மாநகரப் பகுதியில் மெத்தனால், எத்தனால் ஆகியவற்றை அனுமதி பெற்று இருப்பு வைத்திருக்கும் நிறுவனங்களைத் தொடா்ந்து கண்காணித்து வருகிறோம்.
கள்ளச்சாராயம் தொடா்பான நடவடிக்கைகளில் யாரேனும் ஈடுபட்டால் உடனடியாக குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் குறித்து பொதுமக்கள் தகவல் அளிக்க கைப்பேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. கிடைக்கப் பெறும் தகவலின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவும் காவல் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட வன அலுவலா் காஷ்யப் சஷாங்க் ரவி, மாவட்ட வருவாய் அலுவலா் பெ.மேனகா, முதுநிலை மண்டல மேலாளா் (டாஸ்மாக்) நா்மதா தேவி, துணை ஆணையா்கள் கௌதம் கோயல், எஸ்.பி.லாவண்யா, குணசேகரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் செல்லபாண்டியன், வருவாய் கோட்டாட்சியா்கள் மாறன், ஆ.தணிகாசலம், எஸ்.சரண்யா உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் உடனிருந்தனா்.