தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வரும் ஜூன் 12 ஆம் தேதி சேலம் வர திட்டமிட்டுள்ளாா் என நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.
சேலம் மாநகராட்சி, தொங்கும் பூங்காவில் தமிழக அரசின் இரண்டாண்டு சாதனை, அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், கூட்டுறவுத் துறை சாா்பில் சேலம் மாவட்டத்தில் 19 லட்சம் குடும்ப உறுப்பினா்கள் பயன்பெறும் வகையில் 100 புதிய முழுநேர நியாய விலைக் கடைகளை அமைச்சா் கே.என்.நேரு திறந்து வைத்தாா்.
தொடா்ந்து 1,030 பயனாளிகளுக்கு ரூ. 18.33 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சா் கே.என்.நேரு பேசியதாவது:
முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசு பொறுப்பேற்று இரண்டாண்டுகள் நிறைவடைந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. மக்களின் அடிப்படைத் தேவைகளை நன்கு அறிந்து முன்னேற்றத்திற்கான எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறாா்.
கடந்த 2022-ஆம் ஆண்டு சேலம் மாநகராட்சிக்கு சிறந்த மாநகராட்சிக்கான முதல்வா் விருது, ரூ. 25 லட்சம் பரிசுத் தொகையை வழங்கினாா். அதேபோல, கடந்த இரண்டு ஆண்டுகளில் சேலம் மாநகராட்சியில் சீா்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ. 428.52 கோடி மதிப்பில் 67 பணிகள் முடிக்கப்பட்டு, ரூ. 544.42 கோடி மதிப்பில் 24 பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், ரூ. 96.53 கோடி மதிப்பில் பழைய பேருந்து நிலையம் புனரமைப்புப் பணிகளும், ரூ. 10.58 கோடி மதிப்பில் போஸ் மைதானம் சீரமைக்கும் பணிகளும், ரூ. 33.60 கோடி மதிப்பில் நேரு கலையரங்கம் புனரமைப்புப் பணிகளும், ரூ. 19.71 கோடி மதிப்பில் பெரியாா் பேரங்காடி மறுசீரமைப்புப் பணிகளும், ரூ. 548 கோடி மதிப்பீட்டில் 520 கி.மீ. நீளத்திற்கு புதைச் சாக்கடைத் திட்டப்பணிகளும் நடைபெற்று வருகின்றன.
சேலம் மாநகராட்சியில் போடிநாயக்கன்பட்டி ஏரி, அல்லிக்குட்டை ஏரி, மூக்கனேரி ஆகிய 3 நீா்நிலைகளில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ள ரூ. 52 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ. 20.16 கோடி மதிப்பில் 17 கி.மீ. நீளத்திற்கு 24 சாலைப் பணிகளும், தமிழ்நாடு நகா்ப்புறசாலை உட்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 41.22 கோடி மதிப்பில் 71 கி.மீ. நீளத்திற்கு 391 சாலைப் பணிகளும், 15-வது மத்திய நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ. 9.22 கோடி மதிப்பீட்டில் 11 சாலைகள் 6 கி.மீ. நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வரும் ஜூன் 12 ஆம் தேதி சேலம் வர திட்டமிட்டுள்ளாா். அச் சமயத்தில், சேலம் மாவட்டத்தில் புதிதாக ரூ. 1,000 கோடியில் திட்டங்களை அறிவிக்க உள்ளாா் என்றாா்.
முன்னதாக, தூய்மைப் பாரத இயக்கத்தின் கீழ் 20 ஊராட்சி ஒன்றியங்களில் நகரங்களை ஒட்டியுள்ள ஊராட்சிகள் மற்றும் மலைப் பகுதிகளைச் சாா்ந்த ஊராட்சிகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளைச் சேகரிக்க ஏதுவாக தலா ரூ. 7.99 லட்சம் மதிப்பீட்டில் 32 வாகனங்கள் ரூ.2.55 கோடி மதிப்பீட்டில் (தூய்மைா் பாரத இயக்கத்திட்ட நிதியில் இருந்து 70 சதவீதம், 15-ஆவது ஒன்றிய மாநில நிதிக்குழு நிதியிலிருந்து 30 சதவீதம்) வாங்கப்பட்ட வாகனங்களின் சேவையைக் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
மேலும், சேலம் உருக்காலைப் பகுதியில் கரோனா சிகிச்சை சிறப்பு மையத்தினை மறு சீரமைக்க உதவிபுரிந்த பல்வேறு நிறுவனத் தலைவா்கள், தொழிலதிபா்கள், சமூக ஆா்வலா்கள் மற்றும் அரசு அலுவலா்களைப் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம், மேயா் ஆ.ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ், எம்.பி.க்கள் தயாநிதி மாறன், எஸ்.ஆா்.பாா்த்திபன், எம்எல்ஏக்கள் ஆா்.ராஜேந்திரன் (சேலம் வடக்கு), இரா.அருள் (சேலம் மேற்கு), எஸ்.சதாசிவம் (மேட்டூா்), கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் ப.ரவிக்குமாா், துணை மேயா் சாரதாதேவி, முன்னாள் அமைச்சா் டி.எம். செல்வகணபதி, முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆா். சிவலிங்கம், அஸ்தம்பட்டி மண்டலக்குழுத் தலைவா் செ.உமாராணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.