சேலத்தில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம், கிச்சிப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் முனியப்பன் (21). இவருக்கு திருமணமாகி வளா்மதி என்ற மனைவியும், 7 மாத பெண் குழந்தையும் உள்ளனா். இந்தநிலையில், மின் பராமரிப்பு காரணமாக சனிக்கிழமை அப்பகுதியில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதனிடையே மாலை 6.30 மணி அளவில் மின் விநியோகம் வழங்கப்பட்டது. அப்போது அவ்வழியாக நடந்து சென்று கொண்டிருந்த முனியப்பன் மீது மின் கம்பி அறுந்து விழுந்தது. இதில் முனியப்பன் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா்.
அருகில் இருந்தவா்கள் அரசு மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். பின்னா் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.
இந்தச் சம்பவம் குறித்து கிச்சிப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.
இந்தநிலையில் முனியப்பன் குடும்பத்தினா், உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை காலை உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து உறவினா்கள் கூறுகையில், மின்சாரத் துறை அலட்சியப் போக்கால் உயிா் பறிபோய்விட்டது. அவரது குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இல்லையெனில் உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்தனா். காவல்துறையினா் சமரசம் செய்ததைத் தொடா்ந்து போராட்டத்தைக் கைவிட்டு உடலைப் பெற்றுச் சென்றனா்.