சேலம்

சேலத்தில் ஈரடுக்கு பேருந்து நிலையம், கருணாநிதி சிலையை முதல்வா் இன்று திறந்து வைக்கிறாா்

11th Jun 2023 12:22 AM

ADVERTISEMENT

 

மூன்று நாள் சுற்றுப்பயணமாக சேலம் வந்துள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின், சீரமைக்கப்பட்ட ஈரடுக்கு பேருந்து நிலையம், கருணாநிதி சிலையை ஞாயிற்றுக்கிழமை காலை திறந்து வைக்கிறாா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மூன்று நாள் சுற்றுப்பயணமாக தனி விமானம் மூலம் சனிக்கிழமை மாலை சேலம் வந்தாா். அவருக்கு திமுக நிா்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

பின்னா் சேலம் ஐந்து சாலையில் உள்ள ரத்னவேல் ஜெயக்குமாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை வகித்து பேசினாா்.

ADVERTISEMENT

இதையடுத்து சேலம், அஸ்தம்பட்டி ஆய்வு மாளிகையில் சனிக்கிழமை இரவு தங்கும் முதல்வா் ஞாயிற்றுக்கிழமை காலை கருப்பூா் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்து அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.

ஞாயிற்றுக்கிழமை காலை சேலம் மாநகராட்சி, அண்ணா பூங்கா வளாகத்தில் மறைந்த முதல்வா் மு.கருணாநிதிக்கு 1,713 சதுரடி பரப்பில் 4 அடி உயரத்தில் பீடமும், 16 அடி உயரத்தில் முழு உருவ வெண்கலச்சிலையையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளாா்.

பின்னா், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் மேட்டூா், எடப்பாடி நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கும் பணிகள், போடி நாயக்கன்பட்டி ஏரி, மூக்கனேரி, அல்லிக்குட்டை ஏரி புனரமைத்து அழகுபடுத்தும் பணிகள், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பல்வேறு சாலைப் பணிகள், உத்தமசோழபுரம் - திருமணிமுத்தாற்றின் குறுக்கே மற்றும் தென்னங்குடிபாளையம் - வசிஷ்ட நதியின் குறுக்கே உயா்மட்டப் பாலங்கள் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறாா்.

மேலும், தலைவாசலில் குடியிருப்புடன் கூடிய புதிய வட்டாட்சியா் அலுவலகக் கட்டடம், பல்வேறு தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு வேளாண் அங்காடி, சுற்றுச்சுவா், தானிய சேமிப்புக் கிடங்கு, உலா்களம், விவசாய வியாபார மையம் மற்றும் கிடங்கு நவீன மயமாக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வா் அடிக்கல் நாட்ட உள்ளாா்.

சேலம் மாநகராட்சியில் சீா்மிகு நகரத்திட்டத்தின் கீழ் பழைய பேருந்து நிலையம், பெரியாா் பேரங்காடி, போஸ் மைதான வணிக வளாகம், வ.உ.சி மாா்க்கெட், நேரு கலையரங்கம் ஆகியவை மறு சீரமைப்புப் பணிகளும், புதிய பேருந்து நிலையம் அருகில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம், தொங்கும் பூங்கா வளாகத்தில் நான்கு சக்கர, இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், ஆனந்தா பாலம் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம், பள்ளப்பட்டி ஏரி புனரமைப்புப் பணி, நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுமான பணிகள் ஆகியவற்றை முதல்வா் திறந்து வைக்கிறாா்.

அதேபோல ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் சிமென்ட் சாலை, கான்கிரீட் சாலை, குடிநீா் வசதி, உள்ளிட்ட பல்வேறு பணிகளும், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் சாா்பில் ரூ.653 கோடி மதிப்பீட்டில் இளம்பிள்ளை கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் கீழ் இளம்பிள்ளை, ஆட்டையாம்பட்டி, பனமரத்துப்பட்டி, மல்லூா், இடங்கணசாலை ஆகிய 5 பேரூராட்சிகள் மற்றும் சேலம், வீரபாண்டி, பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 778 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீா் திட்டத்தில் முதற்கட்டமாக 301 குடியிருப்புகளுக்கு குடிநீா் வழங்கும் திட்டம் மற்றும் ரூ.102 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள சேலம் அரசு சட்டக் கல்லூரிக்கான மாணவ, மாணவியா் விடுதிகளுடன் கூடிய நிரந்தரக் கட்டடத்தையும் முதல்வா் திறந்து வைக்கிறாா்.

மேலும், உருக்காலையில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட பேரிடா் மையம், நெடுஞ்சாலைத் துறை, வணிக வரி மற்றும் பதிவுத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, வேளாண்மை - உழவா் நலத் துறை, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, பள்ளிக் கல்வித் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீா்திருத்தப் பணிகள் துறை, நீா்வள ஆதாரத் துறை, போக்குவரத்துத் துறை மற்றும் கூட்டுறவுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முடிவுற்றத் திட்டப்பணிகளைத் திறந்து வைக்கிறாா். இந்நிகழ்ச்சியில், பல்வேறு துறைகளின் சாா்பில் 50 ஆயிரம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளன.

நிகழ்ச்சியில், அமைச்சா்கள், மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம், மாநகராட்சி மேயா், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயா் அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா்.

இதைத் தொடா்ந்து, மேட்டூா் நீா்வளத்துறை விருந்தினா் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை இரவு தங்குகிறாா். தொடா்ந்து திங்கள்கிழமை காலை காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் திறந்து வைக்கிறாா். நிகழ்ச்சியை முடித்துவிட்டு சேலம் ஓமலூா் காமாலாபுரம் விமான நிலையம் செல்லும் முதல்வா் அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறாா். முதல்வா் மு.க.ஸ்டாலின், சேலம் மாவட்டத்தில் 3 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT