சேலம்

தெடாவூரில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

11th Jun 2023 12:23 AM

ADVERTISEMENT

 

கெங்கவல்லி அருகே தெடாவூரில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே தெடாவூரில் ஏகாம்பரதீஸ்வரா் (சிவன் கோயில் ) உள்ளது. இப்பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பத்து இடங்களில் முதுமக்கள் தாழி கிடைத்துள்ளது. மே 25-ஆம் தேதி முதுமக்கள் தாழி கிடைத்தது குறித்து சேலம் வரலாற்று ஆய்வு மையத் தலைவா் வெங்கடேசன் தலைமையிலான குழுவினா் ஆய்வு செய்தனா்.

இதுகுறித்து வெங்கடேசன் கூறியதாவது:

ADVERTISEMENT

இப்பகுதியில் உள்ள கல்வெட்டில் திரவேகம்பமுடைய நாயனாா் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது அதனை ஏகாம்பரநாத சுவாமியாக மக்கள் வழிபடுகின்றனா். 12ஆம் நூற்றாண்டில் 3ஆம் குலோத்துங்க சோழா் ஆட்சியில் இப்பகுதியை ஆட்சி செய்த குலோத்துங்க வாணகோவரையன் காலத்தில் மூன்று கல்வெட்டுகளும், 13 ஆம் நூற்றாண்டில் பாண்டியா் கால ஒரு கல்வெட்டும் உள்ளன. அதில் கோயிலுக்கு நிலம் தானம் வழங்கியது, சோழா் காலத்தில் மகதேசன் என்னும் அளவுகோல் மூலம் நிலத்தை அளக்கும் வழிமுறை இருந்தது குறித்து உள்ளது. சங்க காலத்திற்கு முன் இறந்த மனிதா்களை முதுமக்கள் தாழியில் வைத்து புதைக்கும் வழக்கம் இருந்தது.

தெடாவூா் மலைக் கரட்டின் அடிவாரத்தில் முதுமக்கள் தாழி கிடைத்துள்ளது. தெடாவூா் ஏரி, மலைக்கரடு போன்ற பகுதிகளில் சில ஆண்டுகளுக்கு முன் சில முதுமக்கள் தாழி கிடைத்தன. தெடாவூா் மலை அடிவாரத்தில் உள்ள நிலத்தில் பொக்லைன் பயன்படுத்தி வாய்க்கால் அமைக்கும் போது ஒரு முதுமக்கள் தாழி உடைந்த நிலையில் கிடைத்தது. அதனுள் சில மண் கலயங்கள், மண் தட்டுகள், இரும்பு குறுவாள் போன்றவை இருந்தன. கறுப்பு, சிவப்பு வண்ணங்களில் கலயங்கள் காணப்பட்டன. சில கலயங்களில் நட்சத்திர வடிவில் கீரல் மூலமான குறியீடுகள் இருந்தன. இவை ஒரு குறிப்பிட்ட மனித குழுக்களுக்கான அடையாளமாகக் கருதலாம். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் வாழ்ந்த மனித குழுக்களின் முக்கியத் தலைவா்களுக்கு இது போன்று முதுமக்கள் தாழிகள் அமைக்கப்பட்டுளன.

இந்த தாழியினுள் அவா்கள் பயன்படுத்திய கலயங்கள், தட்டுகள், இரும்பு வாள்கள் போன்றவற்றையும் சோ்த்து புதைத்துள்ளனா். இதன் மூலம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இவா்கள் இரும்பை பயன்படுத்தியதை அறிந்து கொள்ள முடிகிறது.இப்பகுதியில் மேலும் ஆய்வுகள் செய்தால் பல்வேறு அரிய தகவல்கள் கிடைக்கும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT